2014 பாராளுமன்ற தேர்தலில் பா.ஜ.க. வெற்றி பெற்றதற்கு காரணமாக இருந்த இந்தியாவின் மிகப்பெரும் தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர் ஐ-பேக் நிறுவனத்தில் இருந்து விலகப்போவதாக அறிவித்துள்ளார்.
இது மிகப்பெரும் சவாலான பணியாக உள்ளது இதை நான் தொடர விரும்பவில்லை என்று என்.டி.டி.வி.க்கு அளித்துள்ள பேட்டியில் கூறியுள்ளார்.
மேற்கு வங்க தேர்தலில் பா.ஜ.க. இரட்டை இலக்க தொகுதிகளில் கூட வெற்றி பெறாது அவ்வாறு வெற்றிபெற்றால் இந்த தொழிலையே விட்டுவிடப்போவதாக சில மாதங்களுக்கு முன் அறிவித்திருந்தார் பிரசாந்த் கிஷோர்.
மம்தா பானர்ஜி-யின் வெற்றிக்காக திரிணாமுல் காங்கிரஸ் கட்சியுடன் கைகோர்த்து பணியாற்றிய அவர், இன்றைய தேர்தல் முடிவுக்கு பின், தனக்கு பதில் தன் சகாக்கள் இந்த பணியை மேற்கொள்வார்கள் நான் அரசியல் வியூக வகுப்பாளராக தொடரவில்லை என்று கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த சில மாதங்களுக்கு முன், இவர் பஞ்சாப் மாநில முதல்வர் அம்ரிந்தர் சிங்-க்கு ஆலோசகராக நியமிக்கப்பட்டார் என்பதும், அதனை தொடர்ந்து அவர் ஐ-பேக் நிறுவனத்தின் இயக்குனர் பொறுப்பில் இருந்து விலகினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.