சென்னை

சென்னையில் உள்ள ஜெ ஜெ நகரில் அதிமுக பிரமுகர் வீட்டில் தேர்தல் அதிகாரிகள் நடத்திய சோதனையில் ரூ.1.80 லட்சம் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

சென்னையில் உள்ள ஜெ ஜெ நகரில் கலைவாணர் நகர்ப் பகுதியில் அதிமுக பிரமுகரான சாந்தி வசித்து வருகிறார்.   அதிமுக சார்பில் இந்த பகுதியில் உள்ள 88 ஆம் வார்டில் சர்மிளா சரவணன் என்பவர் மாநகராட்சி உறுப்பினர் தேர்தலில் போட்டியிடுகிறார்.   தற்போது வாக்காளர்கருளுக்கு பணம் கொடுப்பதைக் கண்காணிக்க தேர்தல் அதிகாரிகள் தீவிர சோதனை இட்டு வருகின்றனர்

சாந்தியின் வீட்டில் சர்மிளாவுக்காக வாக்காளர்களுக்கு பணம் அளிக்கப் பணம் பதுக்கி வைத்துள்ளதாகத் தகவல் வந்தது.  இதையொட்டி  திடீரென அம்பத்தூர் மண்டல தேர்தல் பறக்கும்படை அதிகாரி சீனிவாசன் தலைமையில் தேர்தல் அதிகாரிகள் சாந்தியின் வீட்டில் திடீர் சோதனை நடத்தினர்.   அப்போது சாந்தியின் வீட்டில் ஒரு ரகசிய இடத்தில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரூ.1.80 லட்சம் ரொக்கம் சிக்கி உள்ளது.

இந்த பணத்தைத் தேர்தல் அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.    இந்த பணம் குறித்த எவ்வித ஆவணங்களோ விவரங்களோ சாந்தியிடம் இல்லை.  எனவே இது வாக்காளர்களுக்கு வழங்க வைக்கப்பட்ட பணம் என அதிகாரிகள் முடிவுக்கு வந்துள்ளனர்.  அதிமுக பிரமுகர் சாந்தியிடம் இந்த விவகாரம் தொடர்பாகத் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.