சென்னை: ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான தேர்தல் பார்வையாளர்களை நியமித்து மாநில தேர்தல் ஆணையம் உத்தரவிட்டு உள்ளது.

தமிழகத்தில் கடந்த 2019 ஆம் ஆண்டு ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது. அப்போது புதிய மாவட்டங்கள் பிரிப்பால் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, நெல்லை, தென்காசி உள்பட 9 மாவட்டங்களில  வார்டு மறுவரையறை பணிகள் காரணமாக உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படவில்லை. இதனையடுத்து 9 மாவட்டங்களில் தேர்தல் நடத்தக்கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. உச்சநீதிமன்றமும் செப்டம்பர் 15 ஆம் தேதிக்குள் 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தலை நடத்தி முடிக்க உத்தரவிட்டது.

இதையடுத்து, வேறுவழியின்றி, உள்ளாட்சி தேர்தலுக்கான தேதியை மாநில தேர்தல் ஆணையம் அறிவித்தது. அதன்படி,  9 மாவட்டங்களில் அக்டோபர் 6, 9 ஆகிய தேதிகளில் ஊரக உள்ளாட்சி தேர்தல் 2 கட்டங்களாக நடத்தப்படும் என தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் அறிவித்தது. செப்டம்பர் 23 ஆம் தேதி வேட்புமனுக்கள் மீது பரிசீலனையும், வேட்புமனுக்களை திரும்ப பெற செப்டம்பர் 25 ஆம் தேதி கடைசி நாள் எனவும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. முதல் கட்ட வாக்குப்பதிவு அக்டோபர் 6 ஆம் தேதியும், 2ம் கட்ட வாக்குப்பதிவு அக்டோபர் 9 ஆம் தேதியும், பதிவான வாக்குகள் அக்டோபர் 12 ஆம் தேதி எண்ணப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், 9 மாவட்டங்களுக்கும் ஐஏஎஸ் அதிகாரிகள் தேர்தல் பார்வையாளர்களை நியமித்து மாநில தேர்தல் ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது.