திருச்செந்தூர்:

னிமொழிக்கு ஆதரவாக தூத்துக்குடி மாவட்டத்தில் களமிறங்கி உள்ள திருச்செந்தூர் தொகுதி எம்எல்ஏ அனிதா ராதாகிருஷ்ணன் வீடு மற்றும் பன்னை தோட்டங்களில் 2வது முறையாக நேற்று நள்ளிரவு வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.

ஏற்கனவே கடந்த 29ந்தேதி சோதனை நடைபெற்ற நிலையில், வாக்காளர்களுக்கு பணம் கொடுக்க பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக வந்த தகவலை தொடர்ந்து 2வதுமுறையாக சோதனை நடை பெற்றது. இதன் காரணமாக அந்த பகுதியில் பரபரப்பு நிலவி வருகிறது.

நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரம் சூடுபிடித்துவரும் சூழலில் திமுக முக்கிய நிர்வாகிகளை குறிவைத்து ரெய்டு நடத்தப்படுகிறது. திமுக பொருளாளர் துரைமுருகன் இல்லத்தில் ரெய்டு நடந்தது. இன்றும் அவரது கல்லூரியில் ரெய்டு நடந்தது.

திமுக இதுபோன்ற சலசலப்புகளுக்கு அஞ்சாது என ஸ்டாலின் பேசியிருந்த நிலையில் திமுகவின் திருச்செந்தூர் எம்.எல்.ஏ அனிதா ராதாகிருஷ்ணன் பண்ணை இல்லத்தில் தேர்தல் பறக்கும் படையினர்  நேற்று மாலை 6-30 மணிமுதல் நள்ளிரவு வரை சோதனை நடத்தினர்.

அனிதா ராதாகிருஷ்ணனின் சொந்த ஊரான தண்டுபத்தில் உள்ள அவரது பண்ணை தோட்டத்தில், பணம் பதுங்கி வைக்கப்பட்டிருப்பதாக கூறப்பட்ட தகவலை அடுத்து, பறக்கும் படை அதிகாரிகள் செல்வி, ஹேமலதா மற்றும் போலீசார் நேற்றிரவு அங்கு சோதனை செய்தனர்.

தென்னந்தோப்பு, மோட்டார் அறை உள்ளிட்ட இடங்களில் சோதனை நடத்தப்பட்ட நிலையில், பணம் எதுவும் சிக்கவில்லை என்று கூறப்படுகிறது.

ஏற்கனவே கடந்த 29ஆம் தேதி அனிதா ராதாகிருஷ்ணன் பண்ணை தோட்டத்தில் அதிகாரிகள் சோதனை நடத்தியது குறிப்பிடத்தக்கது.

திமுக எம்.எல்.ஏ அனிதா ராதாகிருஷ்ணன் திருச்செந்தூர் சட்டமன்ற உறுப்பினராக உள்ளார். தற்போது தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் கனிமொழியின் தேர்தல் பொறுப்பாளராக உள்ளது குறிப்பிடத்தக்கது.