தஞ்சாவூர்: தேர்தல் பிரசார பயணத்தை தொடங்க திருவாரூர் சென்றுள்ள முதல்வர் ஸ்டாலினின் பிரசார வாசனத்தை தஞ்சைபகுதியில் தேர்தல் பறக்கும் படையினர் திடீர் சோதனை மேற்கொண்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, தேர்தல் பறக்கும் படையினர்,  அரசியல் கட்சி தலைவர்கள், அதிகாரிகள், பொதுமக்கள் என பலரது வாகனங்களை அவ்வப்போது சோதனை செய்து வருகின்றனர். கடந்த இரு நாட்களுக்கு முன்பு கன்னியாகுமரியில்  எதிர்க்கட்சி தலைவர் எடப்படியின் வாகனத்தை சோதனையிட்ட அதிகாரிகள், இன்று முதல்வர் ஸ்டாலின் வாகனத்தை சோதனையிட்டுள்ளனர்.

தமிழக சட்டசபை தேர்தல் அடுத்த மாதம் (ஏப்ரல்) 23-ந் தேதி நடக்கிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் நேற்று தொடங்கியது. முதலமைச்சரும், தி.மு.க. தலைவருமான மு.க.ஸ்டாலின் கொளத்தூர் சட்டசபை தொகுதியில் போட்டியிடுகிறார். நேற்று தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார்.

இதையடுத்து, தனது முதல்கட்ட தேர்தல் பிரசார சுற்றுப்பயணத்தை, தனது தந்தையின் சொந்த ஊரான திருவாரூரில் இருந்து தொடங்குகிறார். அதற்காக தனி விமானம் மூலம்  திருச்சி சென்ற முதல்வர் அங்கிருந்து, பிரசார வாகனம் மூலம் திருவாரூர் சென்றார். திருவாரூர் தெற்குரத வீதியில் இன்று மாலை 5 மணிக்கு நடைபெறும் தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொள்கிறார்.

இந்த பிரசார பொதுக்கூட்டத்தில், திருவாரூர் தொகுதி தி.மு.க. வேட்பாளர் பூண்டி கலைவாணன், திருத்துறைப்பூண்டி தொகுதி இந்திய கம்யூனிஸ்டு வேட்பாளர் மாரிமுத்து, நன்னிலம் தொகுதி எஸ்.டி.பி.ஐ. கட்சி வேட்பாளர் முகமது முபாரக், மன்னார்குடி தொகுதி தி.மு.க. வேட்பாளர் டி.ஆர்.பி.ராஜா ஆகியோரை ஆதரித்து வாக்குகள் சேகரித்து பேசுகிறார்.

இந்த  நிலையில் அங்கிருந்து கார் மூலம் திருவாரூர் நோக்கி புறப்பட்டார். தஞ்சாவூர் அருகே சாலியமங்கலத்தில் அவர் சென்ற பிரசார வேனை தேர்தல் பறக்கும் படையினர் தடுத்தி நிறுத்தி அதிரடி சோதனை மேற்கொண்டார்கள். முதலமைச்சர் அமர்ந்திருந்த முன்பகுதி கதவை திறந்து வேனில் ஏதும் இருக்கிறதா? என்று சோதனை நடத்தினார்கள். வேனின் பின்பகுதி கதவையும் திறந்து சோதனை நடத்தினார்கள். இந்த சோதனையில் பெண் போலீசாரும் ஈடுபட்டனர்

முதலமைச்சரின் வாகனத்தில் எதுவும் இல்லாததால் சோதனைக்கு பிறகு முதலமைச்சரின் வாகனத்தை அங்கிருந்து செல்ல அனுமதித்தனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு நிலவியது

[youtube-feed feed=1]