ஈரோடு:  இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்று வரும் ஈரோடு கிழக்கு தொகுதி வாக்குப்பதிவை சென்னையில் இருந்து தலைமை தேர்தல் ஆணையர் சத்தியபிரதா சாகு கண்காணித்து வருகிறார். மேலும்,  ஈரோடு வீரப்பன்சத்திரம் பகுதியில் உள்ள 45வது வாக்குச்சாவடி யில் இயந்திர கோளாறு  வாக்குப்பதிவு நிறுத்தப்பட்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

ஈரோடு கிழக்கு தொகுதி வாக்குச்சாவடி ஒன்றில் வாக்காளர்களுக்கு திமுகவினர் பணம் விநியோகம் செய்வதாக அதிமுக முன்னாள் எம்எல்ஏ இன்பதுரை தேர்தல் ஆணையத்திடம் புகார் தெரிவித்துள்ளார்.

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு இன்று காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெறுகிறது. மொத்தம் 238 வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. வாக்குச்சாவடிகளைச்  சுற்றி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. பதற்றமான வாக்குச்சாவடிகளாக அறியப்பட்ட 34 மையங்களில் துணை ராணுவ வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இடைத்தேர்தலில் மக்களிள் ஆதரவுடன் தங்களது ஜனநாயக கடமையை செய்து வருகின்றனர். தேர்தலில் போட்டியிடும் முக்கிய கட்சிகளின் வேட்பாளர்களும் தங்களது வாக்கினை செலுத்தி உள்ளனர். வாக்குப்பதிவினை தலைமை தேர்தல் ஆணையர் சாகு, சென்னையில் இருந்து கண்காணித்து வருகிறார்.

இந்த நிலையில், வாக்குப்பதிவு நடைபெறும்  இரண்டு வாக்குச்சாவடிகள் அருகே வாக்காளர்களுக்கு பண விநியோகம் என அதிமுக சார்பில் புகார் கொடுக்கப்பட்டு உள்ளது. வாக்குச்சாவடி 138,139ல் பணப்பட்டுவாடா என குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இதை பாஜகவும் உறுதி செய்துள்ளது.  வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்து வருவதாக குற்றம் சாட்டி அதிமுக முன்னாள் எம்எல்ஏ வழக்கறிஞர் இன்பதுரை தேர்தல் ஆணையத்துக்கு புகார் அளித்துள்ளார்.

யார் வென்றாலும் பணநாயகம் வென்றதாக கருதப்படும்  என தனது வாக்கினை செலுத்திய பாஜக எம்.எல்.ஏ சரஸ்வதி குற்றம் சாட்டி உள்ளார்.

அதுபோல ஈரோடு கல்லுபிள்ளையார் கோயில் வாக்குச்சாவடியில் பெண் வாக்காளருக்கு அலுவலர்கள் மை வைக்க தவறிவிட்டனர் என புகார்களும் எழுந்துள்ளன.

ஈரோடு வீரப்பன்சத்திரம் பகுதியில் உள்ள 45வது வாக்குச்சாவடியில் இயந்திர கோளாறு  காரணமாக வாக்குப்பதிவு நிறுத்தம் என தகவல்  வெளியாகி உள்ளது. இதையடுத்து, அங்கு மாற்று வாக்குப்பதிவு இயந்திரம் பொருத்தப்பட்டு மீண்டும் வாக்குப்பதிவு தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.