மும்பை

தாதரில் கடந்த 30 வருடங்களாகத் தீபாவளி நேரத்தில் தொடர்ந்து நடைபெறும் விற்பனை கண்காட்சி திடீரென தேர்தல் ஆணையத்தால் நிறுத்தப்பட்டுள்ளது.

மகாராஷ்டிர மாநில தலைநகர் மும்பையில் உள்ள தாதர் பகுதியில் உள்ள அண்டோனியோ டி சில்வ பள்ளி அமைந்துள்ளது.  இந்த மைதானத்தில் கடந்த 30 ஆண்டுகளாகத் தீபாவளி சமயத்தில் விற்பனை கண்காட்சி நடைபெறுவது வழக்கமாகும்.   இந்த மாதம் இக்கண்காட்சி 92 கடைகளுடன் ஆகஸ்ட் 23 தொடங்கி உள்ளது.  இது அக்டோபர் 30 வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த கண்காட்சியில் துணிகள், உணவுப் பொருட்கள் வீட்டு அலங்கார பொருட்கள், விளக்குகள், வண்ண கோலமாவுகள் உள்ளிட்ட பண்டிகைக்குத் தேவையான அனைத்துப் பொருட்களும் விற்பனை செய்யப்பட்டு வந்தன.   சமர்தா பஜார் பேத் என்னும் அமைப்பு இந்த கண்காட்சியை நடத்தி வருகிறது.

வரும் 21 ஆம் தேதி மகாராஷ்டிர மாநில சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது.  இதையொட்டி தேர்தல் ஆணையம் இந்த விற்பனைக் கண்காட்சியை முன்னறிவிப்பின்றி நிறுத்தி உள்ளது.  தீபாவளிக்கு இரு வாரங்கள் இருக்கும் வேளையில் இவ்வாறு திடீரென கண்காட்சி மூடப்பட்டதால் வர்த்தகர்கள் கடும் துயரத்தில் ஆழ்ந்துள்ளனர்.

இங்குக் கடை வைத்திருந்தவர்களில் ஒருவரான சதீஷ் ரானே, ”நாங்கள்  தீபாவளியை முன்னிட்டு பல இடங்களில் கடன் வாங்கி ஒவ்வொருவரும் ரூ.1 முதல் ரூ.1.6 லட்சம் வரை பொருட்களை வைத்திருந்தோம்.    தற்போது அவை அனைத்தும் எங்களுக்கு  நஷ்டமாகி உள்ளது.  திடீரென எங்களை இங்கிருந்து போகச் சொன்னால் நாங்கள் எங்கு சென்று வர்த்தகம் செய்ய முடியும்?  எங்கள் கடனை எவ்வாறு திருப்பி செலுத்துவோம்?” எனக் கவலையுடன் கேட்டுள்ளார்.

இந்தப் பள்ளியின் தாளாளர் ரொட்ரிகூஸ், “நாங்கள் கண்காட்சி குறித்து முடிவு செய்யும்  போது தேர்தல் தேதிகள் அறிவிக்கப்படவில்லை.  எனவே நாங்கள் மைதானத்தைக் கண்காட்சிக்கு அளித்தோம்.  அத்துடன் பள்ளி கட்டிடத்தின் உள்ளேயும் பல நிகழ்வுகள் நடக்க உள்ளன.   ஆனால் தேர்தல் ஆணையம் திடீரென அவற்றை நிறுத்தச் சொல்லி உத்தரவிட்டுள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.

இது குறித்து மாவட்ட தேர்தல் அதிகாரி சிவாஜி ஜொந்தாலே, “இந்த பள்ளி வாக்குப்பதிவு மையம் அல்ல.   தொகுதியின் நடுவில் உள்ளதால் வாக்குப்பதிவு இயந்திரங்களை இங்கு வைக்க உள்ளோம்.  அத்துடன் இங்கு வாக்கு எண்ணிக்கையும் நடைபெற உள்ளது.  இந்த வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகு கண்காட்சியை நடத்தவும்  அதிக நாட்கள் நீட்டிக்கவும் பள்ளிக்கு ஆலோசனை அளித்துள்ளோம்” எனத் தெரிவித்துள்ளார்.

தீபாவளி முடிந்த பிறகு மீண்டும் கண்காட்சியை நடத்துவதாலோ அல்லது நீட்டிப்பதாலோ எந்த பயனும் இல்லை என வர்த்தகர்கள் தெரிவிக்கின்றனர்.