சென்னை: தமிழ்நாட்டில் உள்ள விடுதலைச்சிறுத்தைகள், நாம் தமிழர் கட்சிகளை இந்திய தேர்தல் ஆணையம் மாநில கட்சியாக அங்கீகாரம் செய்து அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.
தேர்தல் சின்னமாக பானை சின்னத்தை வழங்கி விடுதலைச்சிறுத்தைகள் கட்சி, அங்கீகரிக்கப்பட்ட மாநில கட்சி என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அதுபோல, நாம் தமிழர் கட்சிக்கு மாநில கட்சி அங்கீகாரம் வழங்கி இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
நாம் தமிழா் கட்சி மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி ஆகியவற்றை அங்கீகாரம் பெற்ற மாநில கட்சிகளாக இந்திய தோ்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இது குறித்து இரண்டு கட்சி தலைமைக்கும் கடிதம் ஒன்றையும் அளித்துள்ளது. அதில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு அளிக்கப்பட்ட நோட்டிஸில் ” 2024 மக்களவைத் தேர்தலின் முடிவுகளின் அடிப்படையில், தமிழ்நாட்டில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியை மாநிலக் கட்சியாக அங்கீகரித்துள்ளது.
கட்சியின் கோரிக்கையை கருத்தில் கொண்டு, பானை சின்னம் தமிழ்நாட்டில் அடையாளமாக விசிக கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது” என அறிவிக்கப்பட்டுள்ளது. மாநில கட்சியாக அறிவிக்கப்பட்டுது என்றால் அந்த காட்சிகள் தங்களுக்கென தனி சின்னத்தை தேர்வு செய்து அதனை தங்கள் கட்சி சின்னமாக பெற முயற்சி மேற்கொள்ளலாம்.
எனவே, அதன்படி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி (விசிக) தங்களுக்கு பானை சின்னம் வேண்டும் என்று கோரியபடி அந்தக் கட்சிக்கு பானை சின்னத்தை முன்பதிவு செய்திருக்கிறது. இனி விசிக போட்டியிடும் தோ்தல்களில் அந்தக் கட்சி பானை சின்னம் கோரினால் அதை தோ்தல் ஆணையம் ஒதுக்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், விசிகவுக்கு அங்கீகரிக்கப்பட்ட மாநில கட்சி என்னும் அங்கீகாரத்தையும், கட்சிக்கு பானை சின்னத்தை தேர்தல் சின்னமாக அதிகாரப்பூர்வமாக இன்று இந்திய தேர்தல் ஆணையம் வழங்கியுள்ளது என்ற தகவலை கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் தனது சமூக வலைத்தள பக்கங்களில் அறிவித்துள்ளார். 1999இல் தேர்தல் ஆணையத்தின் அங்கீகாரத்தைப் பெற வேண்டுமென்ற நோக்கத்தோடு தேர்தல் களத்துக்கு வந்த விசிகவின் 25ஆண்டுகால கனவு தற்போது நிறைவேறியுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
அதுபோல, நாம் தமிழர் கட்சியையும் மாநில கட்சியாக அங்கீகாரம் வழங்கியுள்ளது. திரைத்துறையில் இருந்து ஈழத் தமிழ், தமிழ் தேசியம் போன்ற முழக்கங்களோடு அரசியலில் நுழைந்தவர் சீமான். நாம் தமிழர் இயக்கமாக செயல்பட்டு வந்ததை, கடந்த 2010-ம் ஆண்டு நாம் தமிழர் கட்சியாக மாற்றி, தலைமை ஒருங்கிணைப்பாளராகவும் சீமான் செயல்பட்டு வருகிறார். அங்கீகரிக்கப்படாத கட்சியாக இருந்து வந்தது.
தேர்தல் ஆணைய விதிப்படி, அங்கீகரிக்கப்பட்ட கட்சியாக மாற, சட்டப்பேரவை தேர்தலில் 6 சதவீத வாக்குகளுடன் 2 சட்டப்பேரவை தொகுதிகளில் வெற்றி பெறவேண்டும். அல்லதுபேரவைத் தொகுதிகளில் மொத்த தொகுதிகளில் 3 சதவீத இடங்களை பெற வேண்டும். அல்லது மக்களவைத் தேர்த லில் 6 சதவீத வாக்குகளுடன் ஒரு மக்களவை தொகுதியில் வெற்றி பெற வேண்டும். அல்லது 8 சதவீத வாக்குகளை பெற வேண்டும்.
இந்த நிலையில், கடந்த 2021ம் ஆண்டு நடைபெற்ற மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் நாம் தமிழர் கட்சி 6.58 சதவீத வாக்குகளை பெற்றது. இதனால் அங்கீகாரம் கிடைக்கவில்லை. இதனால், அக்கட்சியின் கரும்பு விவசாயி சின்னம் பறிபோனது. இந்நிலையில், கடந்த மக்களவைத் தேர்தலில் 8.22 சதவீத வாக்குகளை பெற்றதால், மாநில கட்சி அங்கீகாரம் கிடைத்துள்ளது.
இது தொடர்பாக தலைமை தேர்தல் ஆணையம், அனுப்பியுள்ள கடிதத்தில், தேர்தல் சின்னங்கள் சட்டம் 1968, பிரிவு 6ஏ-ன் விதிகளில் குறிப்பிடப்பட்டிருக்கும் நிபந்தனைகளை கடந்த மக்களவைத் தேர்தலில் நாம் தமிழர் கட்சி பூர்த்தி செய்திருக்கிறது. எனவே தமிழகத்தின் மாநில கட்சியாக அங்கீகாரம் வழங்கப்படுகிறது. விவசாயி அல்லது புலி சின்னம் ஒதுக்ககோரப்பட்டு உள்ளது. ஆனால் இந்த சின்னங்கள் ஏற்கெனவே ஒதுக்கப்பட்டிருப்பதால் நாம் தமிழர் கட்சிக்கு ஒதுக்க முடியாது என்றும் குறிப்பிட்டுள்ளது.