புதுடெல்லி:
தேர்தல் முறைகேடு மற்றும் நன்னடத்தை விதி மீறல் குறித்து புகார் செய்ய, புதிய செயலி (ஆப்) ஒன்றை இந்திய தலைமை தேர்தல் ஆணையம் அறிமுகப்படுத்தவுள்ளது.
இதுகுறித்து இந்திய தலைமை தேர்தல் ஆணையம் தரப்பில் கூறியிருப்பதாவது:
தேர்தல் நேரத்தில் நன்னடத்தை விதிகளை வேட்பாளர்கள் மீறும் போதும், தேர்தல் முறைகேடு குறித்தும் புகார் செய்யும் வகையில், புதிய செயலியை தேர்தல் ஆணையம் அறிமுகப்படுத்தவுள்ளது.
இந்த செயலியை பொதுமக்கள் பதிவிறக்கம் செய்து தேர்தல் முறைகேடு குறித்து புகார் தரலாம். தேர்தல் நன்னடத்தை விதிகள் அமலுக்கு வரும் நாளில் இருந்து இந்த செயலி செயல்படும்.
இந்தச் செயலியின் மூலம் புகார் கொடுத்த நூறு நிமிடங்களுக்குள், சிறப்புக் குழு அமைக்கப்பட்டு விசாரிக்கப்படும். புகார் கொடுப்பவர்கள் தேர்தல் முறைகேடு மற்றும் நன்னடத்தை விதிமீறல் குறித்த புகைப்படங்களையும் புதிய செயலி மூலம் தேர்தல் ஆணையத்திற்கு அனுப்பலாம்.
அரசியல் கட்சிகள் அளிக்கும் வாக்குச்சாவடி ரசீதை, வாக்களிக்கும் ஆவணமாகப் பயன்படுத்த முடியாது.
அரசியல் கட்சிகள் தரும் வாக்குச் சாவடி ரசீதில்,வேட்பாளர் சின்னமும், புகைப்படமும் இடம்பெற்றிருப்பது வாக்காளர்களை வாக்களிக்க நிர்பந்திப்பதாக புகார் எழுந்தது.
இதன் அடிப்படையிலேயே அரசியல் கட்சிகள் தரப்பில் வாக்குச்சாவடி ரசீது வழங்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
வாக்காளர்கள் வாக்களிக்கச் செல்லும் போது பகுதி 11 ஆவணங்களில் ஏதாவது ஒன்றை எடுத்துச் செல்ல வேண்டும்.
அதிக வாக்குகள் பதிவாகும் வகையில் தேர்தல் ஆணையம் முழு கவனத்தை செலுத்தி வருகிறது. 18 வயது பூர்த்தி அடைந்தவர்கள் தேர்தலில் வாக்களிக்கலாம்.