டெல்லி: தமிழகம் உள்பட 5 மாநில சட்டமன்ற தேர்தலையொட்டி, வாக்குப்பதிவு நடைபெறும் நாளுக்கு முந்தை 72 மணி நேரம், அதாவது 3 நாட்கள் அரசியல் கட்சிகள் சார்பில் இருச்சக்கர வாகன பேரணிக்கு தடை விதிக்கப்படுவதாக இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டு உள்ளது.
தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா,, மேற்கு வங்காளம் மற்றும் அசாம் ஆகிய 5 மாநிலங்களில் தேர்தல் அறிவிக்கப்பட்டு உள்ளது. தமிழகம், புதுச்சேரி, கேரளாவில் ஒரே கட்டமாகவும், அஸ்ஸாமில் 3 கட்டமாகவும், மேற்கு வங்கத்தில் 8 கட்டமாகவும் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. வாக்கு எண்ணிக்கை மே 2ந்தேதி நடைபெற உள்ளது.
தேர்தலையொட்டி, மாநிலங்களில் அனல் பறக்கும் பிரசாரம் நடைபெற்று வருகிறது. அரசியல் கட்சிகள் போட்டிபோட்டு தேர்தல் பிரசாரங்களிலும், வாக்கு சேகரிப்பிலும் ஈடுபட்டு வருகின்றன. ஆங்காங்கே மக்களிடம் வாக்குகளை பெறும் நோக்கில் இருச்சக்கர வாகன பேரணி மற்றும் மக்கள் பேரணிகள் நடத்தப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில், தேர்தல் நடைபெறும் மாநிலங்களில், குறிப்பிட்ட நாட்களில் இரு சக்கர வாகன பேரணிகளுக்கு தேர்தல் கமிஷன் தடை விதித்துள்ளது. இது தொடர்பாக மேற்படி 5 மாநில தலைமை தேர்தல் அதிகாரிகளுக்கு தலைமை தேர்தல் கமிஷன் வழிகாட்டுதல்களை வழங்கி இருக்கின்றன.
அதன்படி, தேர்தல் நடைபெறும் மாநிலங்களில் சில பகுதிகளில் வாக்காளர்களை அச்சுறுத்துவதற்காக வாக்குப்பதிவுக்கு முந்தைய அல்லது வாக்குப்பதிவு நாட்களில் சமூக விரோத சக்திகள் இருசக்கர வாகன பேரணி நடத்துவதாக புகார்கள் வந்துள்ளன. அது தொடர்பாக பரிசிலிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்க மாநில தேர்தல் ஆணையர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தேர்தல் நடைபெறும் தொகுதிகளின் எந்த பகுதியிலும் வாக்குப்பதிவுக்கு 72 மணி நேரத்துக்கு முன்னரோ அல்லது வாக்குப்பதிவு தினத்திலோ இரு சக்கர வாகன பேரணி நடத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
மாநில தேர்தல் ஆணையர்கள் இந்த தகவலை வேட்பாளர்கள், அரசியல் கட்சிகள் மற்றும் தேர்தல் பார்வையாளர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினருக்கும் தெரிவித்து, தேர்தல் கமிஷனின் இந்த உத்தரவு தீவிரமாக கடைப்பிடிக்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.