சென்னை:

சென்னையில் இன்று வெளியிடப்பட இருந்த “நாட்டை உலுக்கும் ரபேல் பேர ஊழல்”  என்ற புத்தகம் வெளியிட தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது. மேலும், அந்த புத்தகங்களையும் பறிமுதல் செய்து எடுத்துச் சென்றுள்ளது. இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பாஜக ஆட்சியில் நடைபெற்ற மாபெரும் போர் விமான ஒப்பந்த ஊழலான ரஃபேல் போர் விமான ஊழல் குறித்து,  ‘நாட்டை உலுக்கும் ரபேல் பேர ஊழல்’ என்ற தலைப்பில் எஸ்.விஜயன் எழுதிய புத்தகத்தை தயாரித்த பாரதி புத்தகாலயம் இன்று வெளியிடுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

சென்னை, பூந்தமல்லி நெடுஞ்சாலையில் தாசப்பிரகாஷ் அருகில் கேரள சமாஜத்தில் இன்று மாலை 6 மணிக்கு, இந்து பத்திரிகை ஆசிரியர் என்.ராம் தலைமையில் வெளியிடப்படும் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது.

மேலும், நிகழ்ச்சியில்,  இந்திய சமூக விஞ்ஞானக் கழகத் தலைவர் வீ.பா.கணேசன், அ.கணேசன், லெப்டினண்ட் கர்னல் சி.ஆர்.சுந்தர், இயக்குனர் ராஜூ முருகன், எழுத்தாளர் ஜெய ராணி, க.நாகராஜன்  போன்றோர் கலந்துகொள்வதாகவும் அழைப்பிதழில் அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில்,  இன்று மாலை நடைபெறுவதாக இருந்த புத்தக வெளியீட்டு நிகழ்ச்சிக்கும் தடை விதித்த தேர்தல் அதிகாரிகள், புத்தகக் கடையில் விற்பனை வைத்திருந்த புத்தகங்களையும் பறிமுதல் செய்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தேர்தல் ஆணையத்தின் அடக்குமுறைக்கு எழுத்தாளர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.