டெல்லி: நாடு முழுவதும் காலியாக உள்ள நாடாளுமன்ற, சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல்களை நடத்த தேர்தல் ஆணையம் முடிவு செய்து உள்ளது.
கொரோனா தொற்று காரணமாக நாடு முழுவதும் 6ம் கட்ட ஊரடங்கு உத்தரவு நடைமுறையில் உள்ளது. இந் நிலையில், நாடு முழுவதும் காலியாக உள்ள தொகுதிகளுக்கு எப்போது தேர்தல் நடத்தலாம் என்பது குறித்து, தலைமை தேர்தல் ஆணைய அதிகாரிகள் ஆலோசனை மேற்கொண்டனர்.
கூட்டத்தில் தலைமை தேர்தல் ஆணையர் மற்றும் மாநில தேர்தல் அதிகாரிகள் காணொளி காட்சி மூலமாக ஆலோசனை நடத்தினர். கொரோனா காலத்தில் தேர்தல்களை நடத்தும் போது கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது.
இது குறித்து தேர்தல் ஆணைய செய்தி தொடர்பாளர் ஷெய்பாலி ஷரன் கூறியதாவது: நாடு முழுவதும் காலியாக உள்ள நாடாளுமன்ற, சட்டமன்ற தொகுதிகளுக்கு இடைத்தேர்தல்களை நடத்த தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது.
8 மாநிலங்களில் காலியாக உள்ள 56 சட்டமன்ற தொகுதிகளுக்கு தேர்தல் நடத்தப்பட வேண்டும். தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்படும். இடைத் தேர்தல் அட்டவணை உரிய நேரத்தில் வெளியிடப்படும். வழிகாட்டு நெறிமுறைகளும் அப்போது அறிவிக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.