சென்னை:

சென்னை ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் பணம் பட்டுவாடா காரணமாக தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், வாக்காளர்களுக்கு ஓட்டுப்போட வலியுறுத்தி லஞ்சம் கொடுத்த புகாரின் அடிப்படையில் சசி அணி  (அதிமுக அம்மா) கட்சி வேட்பாளர் டிடிவி தினகரனக்கு தேர்தல் ஆணையம் செக் வைத்துள்ளது.

புகாரின்பேரில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள், கைப்பற்றப்பட்ட பணம் மற்றும் ஆவனங்கள், பணம் கொடுத்தவர்களின் வாக்குமூலம் அடிப்படையில், அடுத்த 6 ஆண்டுகாலத்துக்கு தேர்தலில் போட்டியிடாத வகையில் தகுதி நீக்கம் செய்யப்பட உள்ளதாக டில்லியில் இருந்து தகவல்கள் கசிந்துள்ளன.

ஜெயலலிதா மறைவை தொடர்ந்து சசிகலா அதிரடியாக கட்சிக்குள் புகுந்தார். அதைத்தொடர்ந்து ஆட்சியை பிடிக்கவும் முயன்றார். இதன் காரணமாக அவருக்கும், முன்னாள் முதல்வர் ஒபிஎஸ்க்கும் இடையே மோதல் ஏற்பட்டது.

அதைத்தொடர்ந்து ஒபிஎஸ் தனியாக களமிறங்கினார். அவருக்கு அதிமுக தொண்டர்களின் ஆதரவு பெருகி வருகிறது.

இந்நிலையில், அதிமுகவை சசிகலா கைப்பற்றிவிடாதபடி தமிழக பாரதியஜனதா முயற்சி செய்து வருகிறது. அதன் காரணமாக, உச்சநீதி மன்றத்தில் சொத்துக்குவிப்பு வழக்கில் தீர்ப்பு கூற வலியுறுத்தப்பட்டு, சசிகலாவை சிறைச்சாலைக்குள் தள்ளியது.

அதன் காரணமாக, அதிமுகவில் இருந்து ஜெயலலிதாவால் நீக்கி வைக்கப்பட்ட டிடிவி தினகரனை ஒரே இரவில் கட்சிக்குள் இணைத்து, அவருக்கு துணைப்பொதுச்செயலாளர் என்ற பதவியும் வழங்கி, சசிகலா உத்தரவிட்டார்.

இது அதிமுக கட்சியினரிடையே சலசலப்பை ஏற்படுத்தியது. ஆனால், எதைப்பற்றியும் கவலைப்படாமல் சசி குடும்பத்தினர் ஆட்சியை கைப்பற்றவே தீவிரமாக களமிறங்கி வேலை செய்தனர்.

இதற்கிடையில் ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. இதன் காரணமாக, தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்று முதல்வர் பதவியை பிடிக்க வேண்டும் என்ற எண்ணத்தில், டிடிவி தினகரனே வேட்பாளராக களமிறங்கினார்.

அதைத்தொடர்ந்து தேர்தலில் எப்படியும் வெற்றிபெற்றே தீர வேண்டும் என்ற நோக்கத்தில், அவரை எதிர்த்து போட்டியிட்ட சுயேச்சைகள், மாற்றுக்கட்சி வேட்பாளர்கள் அனைவரையும் விலைபேசி பணிய வைத்தார்.

வாக்காளர்களுக்கும் தேவையான வசதிகள் செய்யப்பட்டது. ஓட்டுக்கு ரூ.4000 மற்றும் அவர்கள் விரும்பும் பொருட்கள் அனைத்தும் பிளிப்கார்ட், அமேஷான் போன்ற ஆன்லைன் ஸ்டோர் மூலம் அனுப்பி வைக்கப்பட்டும் நூதன முறையில் ஓட்டை விலைபேசினார்.

இதன் காரணமாக ஆர்.கே.நகர் தொகுதி மக்களும், தங்களது அன்றாடை வேலைகளை மறந்து தினமும் ஏதாவது கிடைக்கிறதே என்று வீட்டிலேயே முடங்கத் தொடங்கினர்., டாஸ்மாக்கை சுற்றி சுற்றியே வந்தனர்.  எங்கு நோக்கினும் ரூ.2000 தாள்களே நடமாடத் தொடங்கின.

இதுதொடர்பாக தேர்தல் ஆணையத்துக்கு ஏராளமான புகார்கள் குவியத்தொடங்கின. தேர்தல் ஆணையமும் தமிழக போலீசாரை கண்காணிக்க வலியுறுத்தியது. ஆனால், தமிழக போலீசாரோ ஆளும்கட்சிக்கு ஆதரவாகவே செயல்பட்டனர்.

அதைத்தொடர்ந்து மத்திய அரசு அதிகாரிகளைக்கொண்டு பறக்கும் படை ஏற்படுத்தப்பட்டு பல்வேறு இடங்களில் அதிரடி சோதனை நடத்தி பணம் மற்றும் பரிசுப்பொருட்கள் கைப்பற்றப்பட்டன. பணம் கொடுத்தவர்களும் கைது செய்யப்பட்டனர்.

அவர்களிடம் நடைபெற்ற விசாரணையை தொடர்ந்து,  டிடிவி தினகரனின், முக்கிய தளபதியாக செயல்பட்டு வந்த  அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர்.

அவருக்கு ஆதரவாக செயல்பட்ட சுகாதாரத்துறை முக்கிய அதிகாரிகள் வீட்டிலும் ரெய்டு நடைபெற்றது.

சோதனையில் பணம் கொடுத்ததற்கான ஆதாரங்கள் கிடைக்கப்பெற்றதாக வருமான வரித்துறை கூறியது. அதைத்தொடர்ந்து ரெய்டு குறித்த அறிக்கையை இந்திய தேர்தல் ஆணையத்துக்கு அனுப்பி வைத்தது.

இதன் காரணமாக ஆர்.கே.நகர் தேர்தல் ரத்து செய்வதாக தேர்தல் ஆணையம் அறிவித்தது. தேர்தல் ஆணையம் வெளியிட்ட 29 பக்க அறிக்கையில், எப்படியெல்லாம் பணப்பட்டுவாடா நடைபெற்றது என விவரமாக தெரிவித்துள்ளது.

இதுகுறித்து பல்வேறு கட்சியினரும், பணம் கொடுத்த வேட்பாளரை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்றும், அந்த கட்சியை தடை செய்ய வேண்டும் என்றும், சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என்றும் தேர்தல் ஆணையத்தை வலியுறுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் வாக்காளர்களுக்கு லஞ்சம் கொடுத்ததாக அதிமுக(அம்மா) அணி வேட்பாளர் தினகரன் மீது தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க ஆயத்தமாகி வருவதாக டில்லியில் இருந்து வரும் தகவல்கள் கூறுகின்றன.

அதற்கான ஆவனங்கள் தயார் செய்யப்பட்டு வருவதாகவும், அதை வைத்து அடுத்த 6 ஆண்டு களுக்கு டிடிவி தினகரன் எந்த தேர்தலில் போட்டியிட முடியாதபடி தகுதி நீக்கம் செய்ய உத்தேசித்துள்ளதாகவும் அங்கிருந்து வரும் தகவல்கள் கூறுகின்றன.