மும்பை: மகாராஷ்டிரா புதிய முதல்வராக அதிருப்தி எம்எல்ஏக்களின் தலைவரான முன்னாள் அமைச்சர்  ஏக்நாத் ஷிண்டே இன்று இரவு 7.30 மணி அளவில் பதவி ஏற்கிறார். பாஜக ஆதரவுடன் அவர் ஆட்சி அமைக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

3வது முறையாக முதல்வராக பதவி ஏற்கும் ஆசையில் இருந்த பட்னாவிஸ் ஆசை, நிராசையாகி போனது. இதனால் அவர் ஆட்சி பொறுப்பில் இருந்து விலகி இருப்பதாக தெரிவித்து உள்ளார்.

உத்தவ்தாக்கரேவுக்கு எதிராக சிவசேனா கட்சியின் பெரும்பாலான எம்எல்ஏக்கள், முன்னாள் அமைச்சர் ஏக்நாத் ஷிண்டேவுடன் போர்க்கொடி தூக்கி, ஆதரவை வாபஸ் பெற்றதால், உத்தவ் தாக்கரே அரசு கவிழ்ந்தது. இதையடுத்து, இன்று மும்பை வந்த ஷிண்டே, முன்னாள் பாஜ  முதல்வரும், எதிர்க்கட்சி தலைவருமான பட்னாவிஷை சந்தித்து பேசினார். இதையடுத்து, இருவரும், கவர்னர் கோஷ்யாரியை சந்தித்து பேசினர். அப்போது, மாநிலத்தில் ஆட்சி அமைக்க ஏக்நாத் ஷிண்டே உரிமை கோரினார்.  ஷிண்டே மாநில முதல்வராக, பாஜக ஆதரவு கடிதம் கொடுத்தது. அவர்களுக்கு கவர்னர் கோஷ்யாரி இனிப்பு ஊட்டி மகிழ்ந்தார்.

அதைத்தொடர்ந்து பட்நாவிஸ் மற்றும் ஷிண்டே இணைந்து செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது, மகாராஷ்டிரா முதல்வராக ஏக்நாத் ஷிண்டே பதவியேற்பார், இன்று இரவு 7.30 மணிக்கு பதவியேற்பு விழா நடைபெறும் என பாஜக தலைவர் தேவேந்திர ஃபட்னாவிஸ் அறிவித்தார்.

 

தொடர்ந்து உத்தவ் தாக்கரே அரசை கடுமையாக விமர்சித்தவர்,  ஒரு பக்கம் தாவூத்தை எதிர்த்த சிவசேனா மறுபுறம் தாவூத்துக்கு உதவிய குற்றச்சாட்டின் பேரில் சிறைக்கு சென்ற அத்தகைய ஒருவரை அமைச்சரவையில் வைத்துக்கொண்டார்கள். சாவர்க்கரை அவமதித்த ஒருவருடன் அவர்கள் கூட்டணியில் இருந்தனர் என்று குற்றம் சாட்டியதுடன், சிவசேனா எம்.எல்.ஏ.க்கள் காங்கிரஸ் மற்றும் என்.சி.பி உடனான கூட்டணியை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்று கோரினர், ஆனால் உத்தவ் தாக்கரே இந்த எம்.எல்.ஏக்களை புறக்கணித்து எம்.வி.ஏ கூட்டணி பங்காளிகளுக்கு முன்னுரிமை கொடுத்தார், அதனால்தான் இந்த எம்.எல்.ஏக்கள் தங்கள் குரலை தீவிரப்படுத்தி, ஆதரவை வாபஸ் பெற்றனர்.

இந்துத்துவா மற்றும் சாவர்க்கருக்கு எதிரானவர்களுடன் சிவசேனா கூட்டணி அமைத்தது. மக்களின் ஆணையை சிவசேனா அவமதித்தது என விர்சித்த  பாஜக தலைவர் தேவேந்திர ஃபட்னாவிஸ், 2019 இல் பாஜகவும் சிவசேனாவும் கூட்டணி வைத்திருந்ததால், சட்டமன்றத் தேர்தலில் எங்களுக்குத் தேவையான எண்ணிக்கையைப் பெற்றோம். நாங்கள் ஆட்சி அமைப்போம் என நம்பினோம், ஆனால் பாலாசாகேப் வாழ்நாள் முழுவதும் யாருக்கு எதிராக எதிர்ப்பு தெரிவித்தாரோ அவர்களுடன் கூட்டணி வைக்க சிவசேனா முடிவு செய்தது என்று தெரிவித்தார்.

மேலும், இன்று பதவியேற்பு விழா முடிந்ததும், அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட்டு, சிவசேனா மற்றும் பாஜக தலைவர்கள் பதவியேற்பார்கள். ஆட்சியில் இருந்து விலகி இருப்பேன் என்றும்   தேவேந்திர ஃபட்னாவிஸ் கூறினார்.

இதைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய ஏக்நாத் ஷிண்டே, நாங்கள் எடுத்த முடிவு, பாலாசாகேப்பின் இந்துத்துவா மற்றும் எங்கள் எம்.எல்.ஏ.க்களின் தொகுதிகளின் வளர்ச்சிப் பணிகளுக்கு உறுதியளிக்கிறது. எங்களுடன் 50 எம்எல்ஏக்கள் உள்ளனர். நாங்கள் பாஜக ஆதரவுடன் கூட்டணி ஆட்சி அமைப்போம் என்றார்.