சென்னை: நாடு முழுவதும் சலசலப்பை ஏற்படுத்தி உள்ள சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு வரைவு அறிக்கையை தமிழில் வெளியிட தயாராக இருப்பதாக மத்தியஅரசு அறிவித்து உள்ளது.
சுற்றுச்சூழல் மதிப்பீடு வரைவு அறிவிக்கை தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு தயார் நிலையில் இருப்பதாக சென்னை உயர்நீதி மன்றத்தில் மத்தியஅரசு வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.
மத்தியஅரசு சமீபத்தில் வெளியிட்டுள்ள சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு வரைவு அறிக்கை 2020க்கு விவசாயிகள் உள்பட சமூக ஆர்வலர்களிடம் இருந்தும் கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. இதையடுத்து, தமிழக மீனவர் நலச் சங்கம் அமைப்பின் சார்பில் கே.ஆர்.செல்வராஜ், இந்த புதிய சட்ட வரைவு குறித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தார். அவரது மனுவில், மத்தியஅரசு வெளியிட்டுள்ள சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு வரைவு அறிக்கை ஆங்கிலம் மற்றும் இந்தியில் வெளியிடப்பட்டுள்ளது. இதை பிராந்திய மொழிகளில் மொழி பெயர்த்து வெளியிடவில்லை. எனவே அனைத்து மாநில மொழிகளிலும் வரைவு அறிக்கையை மொழிபெயர்த்து வெளியிட உத்தரவிட வேண்டும் எனவும் அதுவரை வரைவு அறிக்கைக்குத் தடை விதிக்க வேண்டும் என கூறியிருந்தார்.
இந்த மனுமீதான கடந்த விசாரணையின்போது, இஐஏ2020 வரைவு அறிக்கைக்குத் தடை விதிக்க மறுத்த நீதிபதிகள், அதை தமிழில் மொழி பெயர்த்து வெளியிடுவதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளதா? இந்த அறிக்கையை உள்ளாட்சி அமைப்புகளின் இணையதளங்களில் வெளியிட முடியுமா என்பது குறித்து விளக்கமளிக்க மத்திய அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டு வழக்கை ஆகஸ்டு 13-ம் தேதிக்குத் ஒத்தி வைத்தனர்
இதையடுத்து, வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது மத்தியஅரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர், சுற்றுச்சூழல் மதிப்பீடு வரைவு அறிவிக்கை தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு தயார் நிலையில் இருப்பதாக மத்தியஅரசு வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.
மேலும், இது தொடர்பான மேல்முறையீடு வழக்கு நிலுவையில் உள்ளதால், தமிழில் வெளியிடப்பட வில்லை என்று கூறினார்.
இதை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், இது தொடர்பாக மத்திய அரசு எழுத்துப்பூர்வமாக பதிலை வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டு வழக்கை வருகிற 19ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
ஏற்கனவே இஐஏ2020 வரைவு அறிக்கையை பல தமிழ் ஆர்வலர்கள் மொழிபெயர்த்து இணையத்தில் வெளியிட்டு விட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.