கெய்ரோ
எகிப்து நாட்டில் உள்ள சூயஸ் கால்வாயில் ஒரு சரக்கு கப்பல் இரு கரைகளுக்கிடையே சிக்கியதால் அந்த வழி முற்றிலுமாக அடைபட்டுள்ளது.
ஐரோப்பாவுக்கு ஆசியாவில் இருந்து வணிகப் பொருட்களைக் கொண்டு செல்ல ஆப்ரிக்காவைச் சுற்றிச் செல்ல வேண்டி இருந்தது. இந்த பயண நேரம் மற்றும் செலவைக் குறைக்க சூயஸ் கால்வாய் செயற்கையாக அமைக்கப்பட்டது. இதன் மூலம் ஆண்டுக்கு 19000க்கும் அதிகமான் கப்பல்கள் மூலம் சுமார் 117 கோடி டன்கள் எடையுள்ள பொருட்கள் கொண்டு செல்லப்படுகின்றன.
கடந்த திங்கள் அன்று சீனாவில் இருந்து நூற்றுக் கணக்கான கண்டெயினர்களுடன் வந்த எவர்கிரீன் என்னும் சரக்குக் கப்பல் சூயஸ் கால்வாய்க்கு வந்தது. நேற்று அந்தக் கப்பல் காலை 7.40 க்கு கிளம்பி சூயஸ் வழியாக ரோட்டர்டாம் சென்றுக் கொண்டிருந்தது. அப்போது பலத்த காற்று வீசியதால் கப்பல் கட்டுப்பாட்டை இழந்தது.
கப்பலின் முன்புறம் கால்வாயின் வடக்குப்புற கரையில் மோதியது. அதே நேரத்தில் கப்பலின் பின்பக்கம் மேற்கு திசையில் இழுத்து தள்ளப்பட்டு எதிர்கரையில் மோதி நின்றது. தற்போது இரு கரைகளுக்கும் இடையில் இந்த எவர்கிரீன் கப்பல் நிற்பதால் அந்த வழி முழுவதுமாக அடைபட்டுள்ளது. பல கப்பல்கள் இரு புறமும் முடங்கி உள்ளன.
சூயஸ் கால்வாய் நிர்வாகம், “கப்பலை மீட்டு எடுத்து நிலைமையை சரி செய்ய நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. இரு கரைகளிலும் கப்பல் மோதி உள்ள பகுதிகளில் உள்ள மணலை தோண்டி கப்பலை மீட்டு எடுக்க முயற்சிகள் நடைபெறுகின்றன. இந்த முயற்சி இன்னும் இரண்டு தினங்களில் சரியாகும் எனத் தெரிவித்துள்ளது.