ஜெனீவா: ஐநா மனித உரிமைகள் கவுன்சிலில் தாக்கல் செய்யப்பட்ட இலங்கைக்கு எதிரான போர்க் குற்ற தீர்மானத்தை இந்தியா புறக்கணித்த போதிலும் நிறைவேறியது.

இலங்கையில் நடைபெற்ற போர்க்குற்றங்கள் குறித்து, ஐ.நா. மனித உரிமை மன்றத்தில், 6 நாடுகளின் சார்பில் தீர்மானம் கொண்டுவரப்பட்டது.  தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பு இன்று நடைபெற்றது.

இலங்கை அரசுக்கு எதிரான இந்த தீர்மானத்தை ஆதரித்து பிரான்ஸ், பிரிட்டன், ஜெர்மனி உள்ளிட்ட 22 நாடுகளும் வாக்களித்தன. சீனா, பாகிஸ்தான், வங்கதேசம் உள்ளிட்ட 11 நாடுகள் தீர்மானத்தை எதிர்த்து வாக்களித்தன.

தீர்மானத்தை ஆதரித்து வாக்களிக்க பல்வேறு தமிழக அரசியல் கட்சிகள் வலியுறுத்தி வந்தன. ஆனால் வாக்கெடுப்பிலிருந்து இந்தியா புறக்கணித்தது. மேலும் 13 நாடுகளும் வாக்கெடுப்பில் பங்கெடுக்காமல் புறக்கணித்தன.  இதனால் பெரும்பான்மை ஆதரவின் அடிப்படையில் இலங்கை அரசுக்கு எதிரான தீர்மானம் ஐநா அவையின் மனித உரிமைகள் கவுன்சிலில் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இலங்கைக்கு எதிரான நிலைப்பாட்டை எடுக்க வேண்டும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், முன்னாள் மத்தியமைச்சர் ப.சிதம்பரம், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி உள்ளிட்டோர் வேண்டுக்கோள் விடுத்திருந்தனர்.

ஆனால், இலங்கைக்கு எதிராக வாக்களிக்காமல் தமிழக அரசியல் கட்சிகள் விடுத்த கோரிக்கையை மத்திய அரசு முற்றிலுமாக நிராகரித்துள்ளது. இலங்கைக்கு எதிரான தீர்மானத்தின் மீது வாக்களிக்காமல் இந்தியா புறக்கணித்தது தமிழர்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி இருக்கிறது.