மாஸ்கோ: அமெரிக்க ரகசியங்களை வெளியிட்டு அதிர்ச்சி ஏற்படுத்திய பொறியாளர் எட்வர்டு ஸ்னோடென்-னுக்கு ரஷியா அரச குடியுரிமை வழங்கி உள்ளது.

அமெரிக்க புலனாய்வு அமைப்பான, சி.ஐ.ஏ.,வின் முன்னாள் கணினி நிபுணர், எட்வர்டு ஸ்னோடென். தற்போது 39வயதாகும், இவர் கடந்த 2013ம் ஆண்டு,  அமெரிக்க புலனாய்வு ரகசியங்கள் பலவற்றை அம்பலப்படுத்தினார். இது அமெரிக்காவின் பிரபல பத்திரிகைகளான தி கார்டியன் மற்றும் தி வாஷிங்டன் போஸ்ட்டில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இதனால் அவரை கைது செய்ய அமெரிக்க அரசு தீவிரம் காட்டிய நிலையில், எட்வர்டு ஸ்னோடென் வெளிநாடுகளில் தஞ்சமடைந்தார்.

முதலில் ஹாங்காம் சென்றவர், பின்னர், ஈக்வடாரில் தஞ்சம் கோர திட்டமிட்டிருந்தார்,  ஆனால் அமெரிக்க அதிகாரிகள் அவரை அடைய முற்பட்டதால், அவர் மாஸ்கோவின் ஷெரெமெட்டியேவோ சர்வதேச விமான நிலையத்தின் போக்குவரத்து மண்டலத்தில் உள்ள ஒரு லேஓவரில் சிக்கித் தவித்தார். 40 நாட்களுக்குப் பிறகு, அவர் போக்குவரத்து மண்டலத்தை விட்டு வெளியேற அனுமதிக்கப்பட்டார். அதைத் தொடர்ந்து அவர் கடந்த   ஒன்பது ஆண்டுகளாக ரஷ்யாவில் இருந்தார்.

இதைத்தொடர்ந்து ஸ்னோடென் கடந்த 2020ம் ஆண்டு  ரஷ்ய குடியுரிமைக்கு விண்ணப்பித்தார். இந்த முடிவை தனது குடும்பத்திற்கு எல்லை களைக் கடக்க அதிக சுதந்திரத்தை வழங்குவதற்கான நடைமுறை நடவடிக்கை என்று விவரித்தார். அவரது கோரிக்கையை தற்போது ஏற்றுக் கொண்டுள்ள ரஷிய அரசு, அவருக்கு ரஷ்ய குடியுரிமை வழங்கியதாக அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக நேற்று (செப்டம்பர் 26ந்தேதி – திங்கள்கிழமை)  கிரெம்ளின் வெளியிட்ட ஆணையில் திரு. ஸ்னோவ்டென், 39, இந்த ஆணையில் குடியுரிமை வழங்கப்பட்ட டஜன் கணக்கான வெளிநாட்டவர்களில் ஒருவர் என புதின் தெரிவித்துள்ளார்.