சென்னை: யாராலும் திருட முடியாத உண்மையான சொத்து கல்வி தான்; படிப்பதற்கு கிடைக்கும் வாய்ப்பு என்பது மிகப்பெரிய வாய்ப்பு என்று சென்னை மாநில கல்லூரி பட்டமளிப்பு விழாவில் கலந்துகொண்ட முதல்வர் மு.க.ஸ்டாலின், தனது கல்லூரி கால நினைவுகளை மாணாக்கர்களிடம் பகிர்ந்தார்.
சென்னை மாநிலக்கல்லூரி பட்டமளிப்பு விழா முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று காலை நடை பெற்றது. இதில் கலந்துகொண்ட முதல்வர் மாணாக்கர்களுக்கு பட்டங்களையும், சான்றிதழ்களை வழங்கி வாழ்த்தினார். பின்னர் நடைபெற்ற நிகழ்ச்சியில் சிறப்பு ஆற்றினார்.
அப்போது, ‘நான் படித்த கல்லூரியில் நடக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். கையில் பட்டங் களோடு, மனதில் கனவுகளோடு இருக்கும் மாணவர்களுக்கு வாழ்த்துக்கள். தமிழ்நாட்டின் முதலமைச்சராக மட்டும் வாழ்த்தவில்லை. கல்லூரியின் முன்னாள் மாணவன் என்ற முறையிலும் வாழ்த்துகிறேன். அரசியலில் ஆர்வம் இருந்த தால் முழுமையாக என்னை நான் கல்வியில் ஈடுபடுத்திக் கொள்ளவில்லை. 1971 சட்டமன்ற தேர்தலில் திமுக வெற்றிக் காக தேர்தல் பிரச்சார நாடகங்களை ஊர் ஊராக சென்று நடத்தினேன். கல்லூரியில் படித்துக் கொண்டு இருந்தபோதே எனக்கு அரசியல் மீது ஆர்வம் வந்தது.
அப்போதுதான், இந்தியாவில் நெருக்கடிநிலை ஏற்பட்டபோது, திமுகவினர் 500க்கும் மேற்பட்டோர் சிறையில் அடைக்கப் பட்டனர். “மிசா சட்டத்தை எதிர்த்ததால் அன்றைய திமுக ஆட்சி கலைக்கப்பட்டது. மிசா காலத்தில் சிறையில் இருந்த போது போலீஸ் காவலுடன் வந்து இந்த கல்லூரியில் தேர்வு எழுதினேன் என தனது கல்லூரி கால வாழ்க்கையை நினைவு கூர்ந்தார்.
பெண்கள் படிக்க வேண்டும், பட்டங்களை பெற வேண்டும், தகுதிகேற்ற வேலைக்கு செல்ல வேண்டும்; பெண்கள் படிப்பது வெறும் வேலைக்குச் செல்வதோடு இல்லாமல் தன்னம்பிக்கையை வளர்த்துக்கொள்ள வேண்டும் என்று கூறியவர், உள்ளாட்சி அமைப்புகளில் 50% இடஒதுக்கீடு. ஆனால் 56% பெண்கள் பொறுப்புகளை அடைந்துவிட்டார்கள். இப்படி 50 ஆண்டுகளுக்கு முன்னால் பார்க்க முடியுமா? முடியாது. ‘திராவிட மாடல் ஆட்சியின் சாதனை என்பது இது தான்” என்றார்.
மாநிலக் கல்லூரியில் 2,000 பேர் அமரும் வகையில் கலைஞர் பெயரில் மாபெரும் அரங்கம் அமைக்கப்படும். மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கு மாநில கல்லூரி வளாகத்திலேயே தாங்கும் விடுதி அமைக்கப்படும் என்று கூறினார்.
இந்த நிகழ்ச்சியில் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, அமைச்சர் மஸ்தான் திமுக எம்.எல்.ஏ உதயநிதி ஸ்டாலின் உள்பட அதிகாரிகள், கட்சி நிர்வாகிகள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.