சென்னை: தமிழ்நாட்டில் பள்ளிகள் திறந்து ஒரு வாரத்திற்குள் அடுத்தடுத்து பள்ளி மாணாக்கர்கள், ஆசிரியர்கள் என பலர் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நிலையில், அதுகுறித்தும், கட்டுப்பாடுகளை மேலும் தீவிரப்படுத்துவது தொடர்பாகவும் வரும் 14ம் தேதி கல்வித்துறை அதிகாரிகள் ஆலோசனை மேற்கொள்கின்றனர்.

தமிழ்நாட்டில் செப்டம்பர் 1ந்தேதி முதல் 9 முதல் 12ம் வகுப்பு வரை மற்றும் கல்லூரிகளில் நேரடி வகுப்புகள் கொரோனா நெறிமுறைகளுடன் தொடங்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில், பல மாணாக்கர்கள் ஆசிரியர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதனால், பெற்றோர்கள் தங்களது பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்ப மறுத்து வருகின்றனர்.

இந்த நிலையில், பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவது தொடர்பாக வரும் 14ஆம் தேதி அன்று  கல்வித்துறை அதிகாரிகள் ஆலோசனை நடத்த உள்ளனர். பள்ளிக் கல்வித்துறை அலுவலக வளாகத்தில் 14-ம் தேதி அன்று நடைபெறவுள்ள இந்த ஆலோசனைக் கூட்டத்தில், பள்ளிக்கல்வித்துறை செயலாளர், ஆணையர், இயக்குநர்கள், முதன்மைக் கல்வி அலுவலர்கள், மாவட்ட கல்வி அலுவலர்கள் ஆகியோர் பங்கேற்க உள்ளனர்.