சென்னை: பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டால் ஆசிரியர்களின் கல்விச் சான்றிதழ்கள் ரத்து செய்யப்படும் என தமிழ்நாடு பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்து உள்ளார்.
தமிழ்நாட்டில் பெண்கள் மீதான பாலியல் வன்முறைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சமீப காலமாக பள்ளிகள், கல்லூரிகளில் மாணவிகள் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்படும் நிகழ்வுகள் அதிகரித்து வருகின்றன. சமீபத்தில் அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லைகள் மற்றும் ஓடும் ரயிலில் இருந்து பெண் பாலியல் தொல்லைக்கு ஆளாக்கப்பட்டு, ரயிலில் இருந்து தள்ளி விடப்பட்ட சம்பவங்களும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. தமிழ்நாட்டில் பெண்களுக்கான பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளதாக தேசிய மகளிர் ஆணையமும் கவலை தெரிவித்துள்ளது.
இந்த நிலையில், பாலியல் அத்துமீறலில் ஈடுபடும் ஆசிரியர்களின் கல்விச் சான்றிதழ்கள் அனைத்தையும் ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அறிவித்துள்ளார்.
சென்னையை அடுத்த குரோம்பேட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியின் வைர விழாவில் கலந்துகொண்ட, பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பின் மகேஸ் பொய்யாமொழி நிகழ்ச்சியில் பேசும்போது, “மத்திய அரசு தமிழ்நாட்டில் கல்வி முறை சிறப்பாக இருப்பதாக புள்ளி விவரங்களின் அடிப்படையில் தெரிவிக்கிறது. ஆனால், வழங்க வேண்டிய நிதியை மட்டும் வழங்க மறுக்கிறது. நடைமுறையில் இருக்கும் திட்டங்களை சிறப்பாக செயல்படுத்த கூட முறையான நிதியை வழங்கவில்லை” என குற்றம் சாட்டினார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்தபோது, “ஒவ்வொரு அரசு பள்ளியிலும் ‘மாணவர்கள் மனசு’ என்னும் பெட்டி வைத்துள்ளோம். ஆனால், மாணவர்கள் அதிலும் தங்களுக்கு ஏற்படும் பய உணர்வுகள், அவர்களுக்கு நடக்கும் சில சம்பவங்களை வெளியில் சொல்வதில்லை. அப்படி இருந்தும் அரசு பள்ளியில் மாணவி ஆசிரியர்களால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் வன்மையாக கண்டிக்கத்தக்கது. இந்த சம்பவத்தின் உண்மை தன்மைகளை விசாரணை செய்து அதில் உண்மை இருக்கும் பட்சத்தில் அவர்களுக்கு கடுமையான தண்டனைகள் வழங்கப்படும்.
அதையும் தாண்டி அவர்களின் கல்விச் சான்றிதழ்கள் அனைத்தும் ரத்து செய்யப்படும். இனி பள்ளிகளில் யாரு தவறு செய்தாலும் அதன் உண்மை தன்மையை ஆராய்ந்து அவர்களின் கல்வி தகுதி ரத்து செய்யப்படும். இனி அது போன்று நடக்காத வண்ணம் மாணவிகளுக்கு ஏற்படும் இடையூறுகளை எந்த ஒரு பயமும் இல்லாமல் ஆசிரியர்கள், தலைமை ஆசிரியர்களுக்கு தெரிவிக்க தொடர்ந்து அவர்களுக்கான புதிய திட்டங்கள் கொண்டு வரப்படுகிறது.
இந்தியாவில் எந்த ஒரு மாநிலத்திலும் இல்லாத வகையில் தொடக்க பள்ளியிலும் ஸ்மார்ட் போர்டு திட்டம் கொண்டு வந்துள்ளோம். 8,000-க்கும் மேற்பட்ட அரசு பள்ளிகளில் அதிநவீன ஆய்வுக்கூடங்கள் கொண்டு வந்துள்ளோம். 10 லட்சம் மாணவர்களுக்கு டேப் கொடுப்பதை பற்றி நீங்கள் கேட்டுக் கொண்டிருக் கிறீர்கள். நாங்கள் 40 லட்சம் மாணவர்களுக்கு டெக்னாலஜிகளை கொண்டு வந்துள்ளோம்.
இவ்வாறு கூறினார்.