சென்னை: ஓபிஎஸ் தரப்பில் தொடரப்படும் அனைத்து வழக்குகளையும் எடப்பாடி பழனிச்சாமி எதிர்கொள்வார் என முன்னாள் அமைச்சர் வளர்மதி கூறினார்.
அதிமுகவில் எழுந்துள்ள ஒற்றை தலைமை பிரச்சனை, அதைத்தொடர்ந்து நேற்று நடைபெற்ற பொதுக்குழு சர்ச்சை, மீண்டும் ஜூலை 11ந்தேதி அதிமுக பொதுக்குழு கூட்டம் தொடர்பான அறிவிப்பு போன்றவை கட்சி இரண்டாக உடையும் நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளது. இதுதொடர்பாக ஓபிஎஸ் தரப்பில் வழக்கு தொடரப்படும் என்றும், தேர்தல் ஆணையத்தில் புகார் அளிக்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.
இந்த நிலையில், இன்று காலை எடப்பாடி பழனிச்சாமி வீட்டில், அவரது ஆதரவாளர்கள், முன்னாள் அமைச்சர்களுடன் ஆலோசனை நடை பெற்றது. இதில் கந்துகொண்ட வளர்மதி, பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, ஓ.பி.எஸ். தரப்பில் போடப்பட்டுள்ள அனைத்து வழக்குகளையும் இ.பி.எஸ். முறையாக சந்தித்தார், இனிமேலும் சந்திப்பார் என்றார்.
அதிமுகவை அழிக்க நினைத்தவர்கள்தான் ஓ.பி.எஸ். தரப்பினர்; அதை இ.பி.எஸ். தான் மீட்டெடுத்து வருகிறார் என்று குறிப்பிட்டவர், அவர்கள் வழக்குகளை தொடரட்டும், அதனை சந்திக்க அதிமுக தயாராக உள்ளது. எடப்பாடி பழனிசாமி எதையும் எதிர்கொள்வார். அது அவருடைய பழக்கம் என்றும், 4 1/2 ஆண்டுகாலம் ஆட்சியை திறம்பட நடத்தியவர் எடப்பாடி பழனிசாமி என்றும் கூறினார்.