சென்னை: ஈரோடு கிழக்கு தொகுதி அதிமுக வேட்பாளராக முன்னாள் எம்எல்ஏ தென்னரசு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அங்க தேசிய ஜனநாயக முற்போக்கு கூட்டணி என்ற பெயரில் ஈபிஎஸ் தரப்பு தேர்தல் பணிமனை திறந்துள்ளது. இது கூட்டணியில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.
அதிமுக கடந்த பல ஆண்டுகளாக பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து வருகிறது. ஆனால், அதிமுகவில் ஏற்பட்டுள்ள மோதல் காரணமாக, தற்போது இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள ஈரோடு கிழக்கு தொகுதியில் பாஜக யாருக்கு ஆதரவு என்பது கேள்விக்குறியாக உள்ளது. இபிஎஸ் தரப்பும், ஓபிஎஸ் தரப்பும் தங்களுக்கு ஆதரவு வேண்டும் என மாறி மாறி வலியுறுத்தி வருகிறது. இதனால், இரு தரப்புக்கும் ஆதரவு வழங்காமல் ஒதுங்கிக்கொள்ளலாம் என பாஜக தலைமை முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், இன்று காலை அதிமுக வேட்பாளராக முன்னாள் எம்எல்ஏ தென்னரசு பெயரை அறிவித்துள்ள எடப்பாடி பழனிச்சாமி, தங்களது அணியின் பெயரை தேசிய ஜனநாயக முற்போக்கு கூட்டணி என்று அறிவித்து உள்ளது. இதுவரை அதிமுக பணிமனை என்ற பெயரில் இருந்த அலுவலகம் தற்போது தேசிய ஜனநாயக முற்போக்கு கூட்டணி என குறிப்பிடப்பட்டுள்ளது.
பாஜக கூட்டணியின் பெயர் தேசிய ஜனநாயக கூட்டணி என்று இருக்கும் நிலையில், எடப்பாடி தரப்பு தேசிய ஜனநாயக முற்போக்கு கூட்டணி என கூறியிருப்பது சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.