சென்னை: ஜூன் 11ந்தேதி ஓபிஎஸ் ஆதரவாளர்களால் வன்முறை களமாக்கப்பட்ட ராயப்பேட்டை  அதிமுக தலைமை அலுவலகத்திற்கு, அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி, நாளை மீண்டும் செல்கிறார்.

அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் அமர்வு, எடப்பாடி கூட்டிய அதிமுக பொதுக்குழு செல்லும் என்றும், அவரது இடைக்கால பொதுச்செயலாளர் பதவியும் செல்லும் என அதிரடியாக தீர்ப்பு வழங்கியது. முன்னதாக ஜூன் 11ந்தேதி அன்று ஓபிஎஸ் தரப்பினரால் அதிமுக தலைமை அலவலகம் சூறையாடப்பட்டு, ஆவணங்கள் திருடப்பட்டன. தொடர்ந்து அதிமுக அலுவலகத்துக்கு சீல் வைக்கப்பட்டது.

இதுதொடர்பான நீதிமன்றம் சீலை அகற்ற உத்தரவிட்டது. அதன்படி, ஜூலை 21-ஆம் தேதி சீல் அகற்றப்பட்டு, அதிமுக அலுவலக சாவி ஈபிஎஸ் தரப்பிடம் ஒப்படைக் கப்பட்டது. தொடர்ந்து அதிமுக அலவலகம் சூறையாடப்பட்டது தொடர்பாக   இன்று சிபி சிஐடி காவல்துறையினர் ராயப்பேட்டை அலுவலகம் சென்று  விசாரணை நடத்தினர். இதையடுத்து, நாளை இபிஎஸ் அலுவலகம் செல்ல உள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

இதுதொடர்பாக அதிமுக தலைமை அலுவலகம்  வெளியிட்டுள்ள அறிவிப்பில், அதிமுக இடைக்காலப் பொதுச் செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும், தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி அவர்கள், நாளை காலை 10 மணியளவில், தலைமைக் கழகம் – புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். மாளிகைக்கு வருகை தந்து, தலைமைக் கழக வளாகத்தில் உள்ள கழக நிறுவனத் தலைவர் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர்., இதய தெய்வம் புரட்சித் தலைவி அம்மா ஆகியோரது திருஉருவச் சிலைகளுக்கு மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செலுத்த உள்ளார்.

இதில், தலைமைக் கழகச் செயலாளர்கள், மாவட்டக் கழகச் செயலாளர்கள், கழக நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், கழகத்தில் பல்வேறு நிலைகளில் பணியாற்றி வரும் நிர்வாகிகள், கழக உடன்பிறப்புகள் ஆகியோர் பெருந்திரளாகக் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் என தெரிவித்துள்ளனர்.

எடப்பாடி பழனிசாமி. கடைசியாக எடப்பாடி பழனிசாமி ஜூன் 27-ஆம் தேதி அதிமுக அலுவலகத்திற்கு சென்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.