சிறப்புக்கட்டுரை: எழுத்தாளர் ராஜ்குமார் மாதவன்
தமிழக அரசியல் களத்தில் எப்போதாவது நிகழும் பேரற்புதங்களின் ஒன்றாக எடப்பாடி பழனிச்சாமி முதல்வரானார். வாய்ப்புகள் யார் கதவை எப்போது தட்டும் என்பதை யாரும் அறியார். ஆனால், கிடைத்த வாய்ப்பை எப்படி பயன்படுத்தவேண்டும் என்பதற்கு பழனிச்சாமி ஒரு சிறந்த உதாரணம் ஆகும்.
அதிர்ஷ்டம் தேடி தந்த வாய்ப்பை தக்க வைப்பதில் கைதேர்ந்தவர் என்பதை அவருடைய கடந்த 4 வருட அரசியல் காய் நகர்வுகள் காட்டுகின்றன. சசிகலா அவர்களின் விடுதலை வரை அவரை பற்றி வாய் திறக்காமல் இருந்த பழனிச்சாமி, விடுதலை உறுதியானவுடன் அவரை எக்காரணம் கொண்டும் அதிமுகவில் சேர்க்கமுடியாது என்று அதிரடிக்காட்டினார்.
ஜெயலலிதா நினைவிடத்தை திறந்ததாகட்டும், திறந்தவேகத்தில் மூடியதாகட்டும் அவருடைய முடிவில் தீர்க்கமாக இருந்தார். இடைத்தேர்தலில், பாமகவை சரிக்கட்டி போதிய சட்டமன்ற உறுப்பினர்களை வெல்ல வைத்ததில் அவருடைய சாதுர்யம் தெரிந்தது.
தேர்தல் அறிவிப்பதற்கு முன்னதாக தன்னை அதிமுகவின் முதல்வர் வேட்பாளராக அறிவித்தது வரை, அவருடைய அரசியல் நகர்வுகளை அவரை கடுமையாக விமர்சிப்பவரையும் வியந்து பார்க்க தூண்டியது. அப்படிப்பட்டவருக்கு, தற்போதைய தேர்தல் போக்கை அறியாதவராக இருக்க வாய்ப்பேயில்லை.
அவர், இந்த தேர்தலை விட தேர்தலுக்கு பின்னான காலகட்டத்திற்கு ஏற்புடைய வலுவான திட்டத்துடன் தான் அரசியல் நகர்வுகளை செய்கிறார். பாமகவை இத்தேர்தலுக்காக மட்டுமன்றி தேர்தலுக்கு பின்னான காலகட்டத்திலும் ஒரு வலுவான கூட்டாளியாக தயார்படுத்தியுள்ளார். அந்த கூட்டாளியின் நெடுநாள் இலக்கான தேதிமுக தேய்வதற்கான காய் நகர்தலாகவே, தேமுதிகவை கூட்டணியில் இருந்து கழட்டிவிட்டார். இது அதிமுக, பாமக பந்தத்தை தேர்தலை கடந்தும் உறுதிப்படுத்தியது.
மேலும் தேமுதிக, சமக, புதிய தமிழகம் போன்ற கட்சிகளை கூட்டணியில் இடம்பிடிக்காமல் செய்து, அதிமுகவிலே உள்ள எதிரணியினர் வென்று சட்டமன்ற உறுப்பினராக வராமல் இருப்பதற்கான காரியத்தை கட்சிதமாக செய்து முடித்தார்.
மொத்தத்தில், அதிமுகவின் கூட்டணி கொங்கு மண்டலத்தில் மற்றும் வடக்கு மண்டலத்தில் மட்டுமே வெற்றிக்கான வாய்ப்புகளை உறுதிப்படுத்தும் நடவடிக்கைகளை செய்துள்ளார்.
மூன்று மந்திரிகளை தவிர அனைத்து மந்திரிகளுக்கும் போட்டியிட வாய்ப்பளித்தது ஒரு தேர்ந்த நகர்வு. அவர்கள் வென்றால், தேர்தலுக்கு பின்னாக திமுக ஆட்சியில் போடப்படும் ஊழல் வழக்குகளுக்காவது தம்மோடு மட்டுமே இருப்பார்கள் என்று எண்ணியே வாய்பளித்துள்ளார்.
அவர்கள் தோற்றால், வழக்குகளோடு அலையும் போது சசிகலாவிடம் செல்வதை விட பாஜக அல்லது திமுகவிற்கே செல்லக்கூடும். அது தனது பிடியில் கட்சியை தக்க வைக்கும் இலக்கிற்கு எந்த வகையிலும் பாதிப்பை ஏற்படுத்தாது.
அடுத்ததாக, 2016 -ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் சீட்டு மறுக்கப்பட்ட பலருக்கும் இத்தேர்தலில் போட்டியிட வாய்ப்புஅளிக்கப்பட்டிருக்கிறது. 2016 இல் போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்டது சசிகலாவால் என்ற கோபம் இந்த பொருளாதார செல்வாக்கு மிக்க தற்போதைய வேட்பாளர்களுக்கு உண்டு.
இவர்கள், வென்றாலும் தோற்றாலும் சசிகலா அணிக்கு செல்லமாட்டார்கள் என்பது பழனிச்சாமியின் கணக்கு. மொத்தத்தில், 2016 -ல் சசிகலாவால் ஓரங்கட்டப்பட்ட புள்ளிகள் பெரும்பாலானவர்களை தனது அணியில் ஒருங்கிணைத்துவிட்டார். இந்த அணி, தேர்தலுக்கு பின்னாக தனக்கான பின்பலமாக இருக்கும் என்று கணித்துள்ளார்.
அவருடைய நகர்வுகளை கூர்ந்து கவனித்தால், அவர் குறைந்தது 50 சட்டமன்ற உறுப்பினர்களையாவது வெல்லவேண்டும் என்று திட்டமிட்டுள்ளது தெரியும். அப்படி வெல்பவர்கள் பெரும்பாலும் கொங்கு மற்றும் வட தமிழகத்தை சேர்ந்தவர்களாகவோ அல்லது தீவிர சசிகலா எதிர்பாளர்களாகவோ இருக்குமாறு திட்டமிட்டுள்ளார்.
அதேசமயத்தில், கட்சியில் தமக்கான போட்டியாளர்களின் வெற்றிக்கு உரிய கூட்டணியை மறுத்ததின் மூலமாக அவர்களின் வெற்றிவாய்ப்பை மறைமுகமாக தடுத்துள்ளார்.
பழனிச்சாமி அதிகாரத்தில் இருந்த போது அவரது திட்டங்கள் யாவும் வென்றன. அதிகாரம் அற்றபோது, அதே ஆளுமை தங்குமா என்பது கேள்விக்குறியே ?
தற்போதைய தேர்தல் களம் ஒரு தீர்க்கமான முடிவை நோக்கி சென்றுவிட்டதாகத்தான் தெரியுது. ஆனால் , தேர்தலுக்கு பின்னான களம் பல சவால்களை எதிர்நோக்கி காத்திருக்கின்றது. அதிமுக பழனிச்சாமியின் ஆளுமையில் தொடருமா, அல்லது சசிகலா தலைமைக்கு செல்லுமா அல்லது பாஜக, அதிமுகவை கபளீகரம் செய்யுமா என்பதை காலமும், களமும் தீர்மானிக்கும்.