கோபி: பெரும் பரபரப்புக்கு மத்தியில் செய்தியளார்களை சந்தித்த மூத்த அதிமுக உறுப்பினர் செங்கோட்டையன், எம்.ஜி.ஆர். ஆளுமையை மனதில் கொண்டு பிரிந்து சென்றவர்களை கட்சியில் மீண்டும் இணைக்க வேண்டும் என்று எடப்பாடி பழனிச்சாமிக்கு அறிவுறுத்தி உள்ளதுடன், அதற்கு 10 நாட்கள் கெடு விதித்துள்ளார். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
யாராவது கட்சியை விட்டு சென்றால் அவர்களை நேரில் சென்று மீண்டும் அழைப்பார் எம்.ஜி.ஆர். ஆளுமை, மக்கள் செல்வாக்கு மிக்க தலைமை தேவை என்பதால் ஜெயலலிதாவை ஆதரித்தோம். அதுபோல எடப்பாடியும், கட்சியில் இருந்து வெளியில் சென்றவர்களை இணைக்க வேண்டும் என வலியுறுத்தியதுடன், வெளியில் சென்றவர்களை இணைக்காமல் ஆட்சி அமைத்துவிடலாம் என கூற முடியாது. ஆட்சி மாற்றம் தேவை என மக்கள் நினைக்கிறார்கள். அதனால் அனைவரும் இணைவது அவசியம் என்றும் வலியுறுத்தி உள்ளார்.

அதிமுகவில் இருந்து ஓபிஎஸ், டிடிவி, சசிகலா என பலர் விலகி சென்றுள்ள நிலையில், எடப்பாடியின் நடவடிக்கையால் அதிருப்தியில் இருந்து வந்த செங்கோட்டையன் இன்று செய்தியாளர்களிடம் திறந்த மனுதுடன் பேசுவதாக கூறியிருந்தார். அதன்படி இன்று காலை ஈரோடு மாவட்டம் கோபியில், தனது ஆதரவாளர்களுடன் வந்து செய்தியாளர்களை சந்தித்ததார். அப்போது அவர் கூறியதாவது,
இது முக்கியமான நேரம், அமைதி காக்க வேண்டும் என தொண்டர்களுக்கு அறிவுறுத்திவிட்டு தனது பேட்டியை தொடங்கினார். தமிழகம் முழுவதும் போக வேண்டிய பேட்டி இது. ரொம்ப முக்கியமானது. முக்கியமான நேரம். அனைவரும் அமைதி காக்க வேண்டும் என்றார்.
முன்னதாக, வீட்டில் இருந்து அலுவலகம் வரை தொண்டர்கள் மத்தியில் பிரச்சார வாகனத்தில் வந்தார். அவருக்கு தொண்டர்கள் உற்சாகமாக வரவேற்பு அளித்தனர். அவர் வந்த வாகனத்தில் அண்ணா, எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா புகைப்படங்கள் மட்டுமே இருந்தது. எடப்பாடி பழனிசாமியின் புகைப்படங்கள் இல்லை. பின்னர் செய்தியாளர்களிடம் பேசும்போது, கட்சியை விட்டு சென்றவர்கள் எந்த பொறுப்பையும் எதிர்பார்க்கவில்லை என்றும், அவர்களை உடனடியாக கட்சியில் சேர்க்க வேண்டும் என தெரிவித்தார். பிரிந்தவர்கள் சேர்ந்தால் வெற்றி நிச்சயம் என கூறிய அவர், அதிமுக தொண்டர்களின் உணர்வுகளை புரிந்து பிரிந்து சென்றவர்களை இணைக்க வேண்டும் என்றவர், அவ்வாறு ஒருங்கிணைக்கவில்லை என்றால், நாங்கள் முன் நின்று ஒருங்கிணைப்போம் என தெரிவித்தார்.
கடந்த 1972-ல் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரால் தொடங்கப்பட்ட இயக்கம் தான் அ.தி.மு.க. கிளைக் கழக செயலாளராக எனது பணியை அ.தி.மு.க. வில் தொடங்கினேன். மக்கள் மனதில் குடிக்கொண்டிருக்கும் தலைவர் தான் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். என்னை பொருளாளராக நியமித்து பொதுக்குழுவை நடத்த எம்.ஜி.ஆர்.சார்பில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அவர் தொடங்கிய காலத்தில் இருந்தே கட்சியின் கிளைச் செயலாளராக பணியாற்றினேன். 1975ல் கோவையில் நடந்த பொதுக்குழுவில் பொருளாளர் ஆக நியமித்தார்கள். 1977ல் சட்டசபை தேர்தலில் போட்டியிட எனக்கு எம்ஜிஆர் வாய்ப்பு கொடுத்தார்.

சத்யா ஸ்டூடியோவுக்கு என்னை அழைத்து மனதார பாராட்டியவர் எம்.ஜி.ஆர். 1977ல் சத்தியமங்கலத்தில் என்னை போட்டியிடுமாறு கூறினார் எம்.ஜி.ஆர். என்னுடைய பெயரை சொன்னால் மட்டும் போதும் தேர்தலில் வெற்றி பெறலாம் என எம்.ஜி.ஆர். கூறினார். இந்தியாவிலேயே சிறந்த முதலமைச்சர் என்ற பெயரை பெற்றவர் எம்.ஜி.ஆர். யாராவது கட்சியை விட்டு சென்றால் அவர்களை நேரில் சென்று மீண்டும் அழைப்பார் எம்.ஜி.ஆர்.
எம்ஜிஆருக்கு பிறகு கட்சியை வழிநடத்தும் திறமை ஜெயலலிதாவுக்கே உண்டு என்று தலைவர்களுடன் நானும் சென்று வேண்டுகோள் விடுத்தேன். ஆளுமை, மக்கள் செல்வாக்கு மிக்க தலைமை தேவை என்பதால் ஜெயலலிதாவை ஆதரித்தோம். திராவிடர்கள், ஆன்மீகவாதிகள் ஏற்றுக்கொள்ளும் ததலைமை பண்பை பெற்றிருந்தார் ஜெயலலிதா. ஜெயலலிதா மறைந்த பிறகு, அதிமுகவுக்கு சோதனை வந்த போது அனைவரும் சேர்ந்து சசிகலாவை அழைத்தோம். அதாவது ஜெயலலிதா மறைவுக்கு பல்வேறு சோதனைகள் வரந்தது. அன்றைக்கு எல்லோரும் ஒன்று சேர்ந்து கட்சியை பேணி காப்பதற்கு கட்சியின் பொதுச்செயலாளராக சசிகலாவை நியமித்தோம். சசிகலாவுக்கு பின் எடப்பாடி பழனிசாமியை நியமித்தோம்.
ஜெ ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு எனக்கு 2 வாய்ப்புகள் கிடைத்தன. இருந்தபோதும் இயக்கம் உடைந்துவிடக்கூடாது என்பதில் உறுதியாக இருந்தேன் அ.தி.மு.க.வுக் காக பல்வேறு தியாகங்களை செய்திருக்கிறேன். இயக்கம் உடைந்து விடக்கூடாது என்பது தொண்டர்களின் நோக்கம் தான். அதிமுகவுக்காக பல தியாகங்களை செய்துள்ளேன். எம்ஜிஆர், ஜெயலலிதாவின் நல்லாசி உடன் இந்த இயக்கம், மீண்டும் தமிழகத்தில் அமைய ஒத்துழைப்பு நல்கிட வேண்டும்.
2016ம் ஆண்டிற்கு பிறகு தேர்தல் களம் எப்படி போராட்ட களமாக இருக்கிறது என்பதை நாம் அறிவோம். வெளியே சென்றவர்களை அரவணைத்தால் தான் தேர்தல் களத்தில் நாம் வெற்றி பெற முடியும். பாஜவின் மூத்த தலைவர்கள் அழைப்பின் பேரில் தான் டில்லி சென்றேன். 6 முன்னாள் அமைச்சர்கள் நேரில் சென்று பிரிந்தவர்களை இணைக்க வேண்டும் என்ற கருத்தை வலியுறுத்தியும் எதிர்க்கட்சி தலைவர் அதனை ஏற்கவில்லை. அதிமுகவில் இருந்து பிரிந்தவர்கள் சேர்ந்தால் தான் வெற்றி நிச்சயம்.
அதிமுகவில் இருந்து வெளியில் சென்றவர்களை ஒருங்கிணைப்பதற்கு நான் காலக்கெடு வைத்திருக்கிறேன். பத்து நாட்களுக்குள் ஒருங்கிணைக்கவில்லை என்றால் நாங்கள் முன் நின்று ஒருங்கிணைப்போம். வெளியே சென்றவர்கள் இணைக்கப்பட வேண்டும்.
2024-ல் பா.ஜ.க.வுடன் கூட்டணி வைத்திருந்தால் 30 இடங்களில் வென்றிருக்க முடியும். ஆனால், அது நடைபெறாமல் போனது. 2016 அதிமுக ஆட்சியில் இருந்தபோதும் 2019, 2021, 2024 ஆகிய ஆண்டுகளில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக தோல்வியை சந்தித்தது
ஒரு சிலர் பேசும் வார்த்தைகள் தொண்டர்கள் மத்தியில் முள் குத்துவது போல உள்ளது. வெளியே சென்றவர்களை அரவணைத்தால் மட்டுமே நாம் தேர்தலில் வெற்றி பெற முடியும். பாஜகவுடன் கூட்டணி வைத்திருந்தால் வெற்றி பெற்றிருக்கலாம் என வேலுமணி உள்ளிட்ட அனைவரும் சொன்னோம். வெளியே சென்றவர்கள் எந்த நிர்பந்தமும் இல்லாமல் கட்சியில் இணைவதாக சொல்கிறார்கள். வெளியே சென்றவர்களை சேர்க்கவில்லை என்றால் என்னை போன்ற மனநிலையில் உள்ளவர்கள் ஒன்றிணைந்து செயல்படுவோம் –
அ.தி.மு.க.வில் தொய்வு உள்ளது, பிரிந்து சென்றவர்களை இணைக்க வேண்டும் என எடப்பாடி பழனிசாமியிடம் கூறினோம். நத்தம் விஸ்வநாதன், தங்கமணி, அன்பழகன் ஆகியோருடன் சேர்ந்து எடப்பாடி பழனிசாமியை சந்தித்து, வெளியே சென்றவர்களை அரவணைத்தால் மட்டுமே தேர்தலை சந்திக்க முடியும் என கூறினோம். வெளியில் சென்றவர்களை இணைக்காமல் ஆட்சி அமைத்துவிடலாம் என கூற முடியாது. அ.தி.மு.க.வில் இருந்து பிரிந்தவர்கள், நிபந்தனை இல்லாமல் மீண்டும் வர தயார் என கூறுகிறார்கள். எந்த பொறுப்பும் தேவையில்லை என கூறுபவர்களை ஏற்றுக் கொள்ள வேண்டும்.
தற்போதைய நிலையில், தமிழ்நாட்டில், ஆட்சி மாற்றம் தேவை என மக்கள் நினைக்கிறார்கள். அதனால் வெளியில் சென்றவர்களை இணைக்க வேண்டும். பிரிந்த தலைவர்களை இணைக்கவில்லை என்றால் நாங்கள் அந்தப் பணிகளை மேற்கொள்வோம். யார், யாரை இணைக்க வேண்டும் என்பது குறித்து பொதுச்செயலாளர் முடிவு செய்து கொள்ளலாம் என்னுடைய கருத்தை கூறி இருக்கிறேன், இது நடக்கவில்லை என்றால் நாங்கள் முயற்சி செய்வோம்.
10 நாட்களில் முயற்சி எடுக்கவில்லை என்றால், இதே மனநிலையில் உள்ளவர்களை திரட்டி முயற்சி மேற்கொள்வோம். அ.தி.மு.க.வுக்காக எந்த ஒரு தியாகத்தையும் செய்வதற்கு நான் தயாராக இருக்கிறேன். *எங்களுடைய கோரிக்கையை விரைந்து நிறைவேற்ற வேண்டும் என்பது தான் எங்களது ஆசை.
ஜெயலலிதா கூறியது போல் நூறாண்டு காலம் அ.தி.மு.க. ஆள வேண்டும் என்பதற்கான பணியை தொடங்கியுள்ளோம். நிறைவேற்றவில்லை என்றால் எடப்பாடி பழனிசாமியின் சுற்றுப் பயணத்தில் கலந்து கொள்ள மாட்டேன் என்றார்.
இவ்வாறு செங்கோட்டையன் கூறினார்.
இதையடுத்து செய்தியளார்கள் உங்களை மீண்டும் அமைச்சர் ஆக்கியது எடப்பாடி பழனிசாமி தானே? என்று கேள்வி எழுப்பினர். அதற்கு செங்கோட்டையன், தன்னைப் போல் 2009-ல் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டவர் தான் எடப்பாடி பழனிசாமி என்று கூறினார். *
பிரிந்து சென்ற தலைவர்களை சந்தித்து பேசி விட்டீர்களா? என்ற கேள்விக்கு அது சஸ்பெஸ்ஸ் என கூறினார்.