சென்னை: தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து விலகிய அமமுக கட்சி பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், எடப்பாடி பழனிசாமியை ஒருபோதும் முதல்வர் வேட்பாளராக ஏற்க முடியாது என திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் பாஜக மாநில முன்னாள் தலைவர் அண்ணாமலை, டிடிவியை அவரது இல்லத்தில் சந்தித்து, கூட்டணியில் சேர வலியுறுத்திய நிலையில், இன்று செய்தியாளர்களிடம் பேசிய டிடிவி தினகரன், எடப்பாடி பழனிசாமியை முதல்வர் வேட்பாளராக ஏற்கும் பேச்சுக்கே இடமில்லை. தேஜ கூட்டணியில் இருந்து வெளியேறிய முடிவை மறுபரிசீலனை செய்யும் பேச்சுக்கே இடமில்லை என கறாராக தெரிவித்துள்ளார்.
கடந்த நாடாளுமன்ற தேர்தலில், டிடிவி தினகரன், ஒபிஎஸ் போன்றோர் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம்பெற்ற நிலையில், தற்போது, 2026 சட்டமன்ற தேர்தலுக்காக அதிமுக பாஜக கூட்டணியில் மீண்டும் இணைந்துள்ளதால், முதல்வர் வேட்பாளராக அதிமுக பொதுச்செயலாளரும், முன்னாள் முதல்வருமான எடப்பாடி பழனிச்சாமி அறிவிக்கப்பட்டுள்ளார்.
எடப்பாடி மீதான அதிருப்தி காரணமாக, ஓபிஎஸ், டிடிவி தினகரன் போன்றோர் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து வெளியேறினர். இதையடுத்து, அவர்களை மீண்டும் கூட்டணியில் சேர்க்க பாஜக தலைமை நடவடிக்கை எடுத்து வருகிறது. அதன்தொடர்ச்சியாக பாஜக மாநில முன்னாள் தலைவர் அண்ணாமலை டிடிவியை சந்தித்து பேசினார். அப்போது அமமுக தேசிய ஜனநாயக கூட்டணியில் சேர வேண்டும் என வலியுறுத்தினார்.
இந்த நிலையில், இன்று செய்தியாளர்களை சந்தித்த டிடிவி, எடப்பாடி முதல்வர் வேட்பாளர் என்றால் பாஜக கூட்டணியில் சேர முடியாது. அண்ணாமலை யால்தான் தேசிய ஜனநாயக கூட்டணியில் தான் சேர்ந்ததாகவும் விளக்கம் அளித்தார். இதனால், தேசிய ஜனநாயக கூட்டணியில் டி.டி.வி. தினகரனை மீண்டும் சேர்க்கும் அண்ணாமலையின் முயற்சி தோல்வி அடைந்தது.
தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்த டி.டி.வி. தினகரன், ஓ.பி.எஸ். ஆகியோரும் விலகிவிட்ட நிலையில், புதிதாக எந்தவொரு கட்சியும், தேசிய ஜனநாயக கூட்டணியல் சேர முன்வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையில், அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட சசிகலா, ஒபிஎஸ் உள்ளிட்டோரை சேர்க்க வேண்டும் என்று செங்கோட்டையன் போர்க்கொடி தூக்கிய நிலையில், அதை ஏற்க எடப்பாடி மறுத்துவிட்டதும், அதிமுகவில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.