சென்னை: திமுக எம்.பி. தயாநிதி மாறன் தொடர்ந்த வழக்கின் விசாரணைக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி இன்று ஆஜர் ஆனார். இதையடுத்து வழக்கின் விசாரணை ஜூன் 27-க்கு ஒத்திவைக்கப்பட்டது.
மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவுக்கு முன்னதாக மத்திய சென்னை தேமுதிக வேட்பாளர் பார்த்தசாரதியை ஆதரித்து பேசிய இபிஎஸ், தயாநிதி மாறன் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து 75 சதவிகித பணத்தை செலவு செய்யவே இல்லை எனக் குற்றம்சாட்டியிருந்தார். இதனை மறுத்த தயாநிதி மாறன், தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து 95 சதவிதத்துக்கு மேல் செலவு செய்துள்ளதாக தெரிவித்தார். தொடர்ந்து, சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் எடப்பாடி பழனிசாமி மீது அவதூறு வழக்கை தொடர்ந்தார்.
இந்த வழக்கின் இன்றைய விசாரணையின்போது , சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் அதிமுக பொதுச் செயலாளரும் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி கே.பழனிசாமி இன்று ( மே 14ந்தேதி) நேரில் ஆஜரானார். இந்த வழக்கின் விசாரணை ஜூன் 27-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டதாக இபிஎஸ் தரப்பு வழக்கறிஞர் இன்பதுரை தெரிவித்துள்ளார்.
முன்னதாக, எடப்பாடி வருகையை முன்னிட்டு, அதிமுக தொண்டர்கள் அதிகளவில் குவிந்ததால், நீதிமன்ற வளாகத்தில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டது.