சென்னை,
தமிழக சட்டசபையில் இன்று மாநகராட்சி மேயர் மற்றும் நகராட்சி பேரூராட்சி தலைவர்களை பொதுமக்களே தேர்வு செய்யும் வகையில் புதிய மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
ஜெயலலிதாவின் முடிவுக்கு எதிராக எடப்பாடி தலைமயிலான அரசு இந்த முடிவை மாற்றி உள்ளது.
ஏற்கனவே தமிழகத்தில் மாநகராட்சி மேயரை பொதுமக்களே வாக்களித்து தேர்வு செய்யும் முறையே இருந்து வந்தது. ஆனால், ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது கடந்த ஆண்டு (2016) இந்த சட்டத்தை மாற்றி புதிய மசோதாவை கொண்டு வந்தார்.
அதன்படி, மாநகராட்சி மேயர் மற்றும் மற்றும் பேரூராட்சி, நகராட்சி தலைவர்களை, தேர்வு செய்யப்பட்ட அந்தந்த பகுதி கவுன்சிலர்களே தேர்வு செய்யும் வகையில் மாற்றி அமைக்கப்பட்டது.
தற்போது ஜெயலலிதா கொண்டு வந்த அந்த முறையை மாற்றி, ஜெயலலிதாவின் ஆட்சியை நடத்தி வரும் என்று கூறிவரும் எடப்பாடி தலைமையிலான அரசு, ஜெ.வின் முறையை மாறறி, மீண்டும் பழைய முறைக்கே திருத்த மசோதாவை சட்டமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது.
சட்டமன்றத்தில் இன்று நகராட்சி நிர்வாகம் குறித்த விவாதம் நடைபெற்றது. அதைத்தொடர்ந்து தமிழக உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, புதிய மசோதாவை தாக்கல் செய்தார்.
இந்த மசோதா மூலம் இனி நடைபெற உள்ள உள்ளாட்சி தேர்தல்களில் மேயர், நகராட்சி தலைவர், பேரூராட்சி தலைவர் பதவிகளுக்கு பொதுமக்களே வாக்களித்து தேர்வு செய்யும் நிலை ஏற்பட்டுள்ளது.
ஜெயலலிதாவின் நிலைக்கு எதிராக எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அரசு செயல்பட்டு வருவது அதிமுக தொண்டர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.