சென்னை: ‘அதிமுக இடைக்கால பொதுசெயலாளர்’ எடப்பாடி பழனிச்சாமி  என்றும்  ‘இனி இரட்டை தலைமை என்ற பேச்சுக்கே இடம் இல்லை’ என்றும் பொள்ளாச்சி ஜெயராமன் கூறினார். அதுபோல  முன்னாள் அதிமுக அமைச்சர் செல்லூர் ராஜுவும், நிரந்தர பொது செயலாளராக எடப்பாடி பழனிசாமி விரைவில் வருவார். மீண்டும் அதிமுக ஆட்சி அமைக்கும் நம்பிக்கை தெரிவித்து உள்ளார். இதற்கிடையில், தீர்ப்பு தனக்கு சாதகமானதும்,  எடப்பாடி பழனிச்சாமியும் தனது சோசியல் மீடியா பக்கங்களில் இடைக்கால பொதுச்செயலாளர் என மாற்றம் செய்துள்ளார்.

அதிமுகவில் எடப்பாடி பழனிசாமி கூட்டிய பொதுக்குழு செல்லும் என்று சென்னை உயர்நீதிமன்றம் இன்று அதிரடி உத்தரவிட்டுள்ளது. இந்த  தீர்ப்பு எடப்பாடி பழனிசாமி தரப்பினருக்கு பெரும் உற்சாகத்தை கொடுத்துள்ளது. எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக தீர்ப்பு வந்துள்ளதால் அவரது ஆதரவாளர்கள் பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் உற்சாக கொண்டாட்டத்தில் ஈடுப்பட்டனர்.

இதையடுத்து, எடப்பாடி பழனிசாமி மீண்டும் ‘அதிமுக இடைக்கால பொதுசெயலாளர்’ என டுவிட்டர் முகப்பு பக்கத்தில் மாற்றம் செய்துள்ளார்.

இந்த  தீர்ப்பு குறித்து செய்தியாளர்களிடம் பேசிய ஈ.பி.எஸ் ஆதரவாளர் பொள்ளாச்சி ஜெயராமன், அதிமுகவில் இனி மேல் இரட்டை தலைமை என்ற பேச்சுக்கே இடம் இல்லை. இது அதிமுகவினர் மட்டும் எதிர்பார்த்த தீர்ப்பு அல்ல, நாட்டு மக்களும் எதிர்பார்த்த தீர்ப்பு தான். ஓபிஎஸ் தரப்பு மேல்முறையீடு செய்தாலும் அதை உச்சநீதி மன்றம் தள்ளுபடி செய்யும். எத்தனையோ சோதனைகளை சந்தித்து அதிமுக என்றால் எடப்பாடி பழனிசாமி தான் என்பதை தீர்ப்பின் மூலம் காட்டியுள்ளார்கள். அதிமுக கொடி, 1.5 கோடி தொண்டர்கள் இனி எடப்பாடி பழனிசாமிக்கு தான் சொந்தம். இனி யாரும் கூக்குரல் இட முடியாது. புதிய தெம்போடு திமுகவை விரைவில் வீட்டுக்கு அனுப்பிவிட்டு,அதிமுக ஆட்சியை அமைக்க மக்கள் தயாராவார்கள். மக்களுக்கு எடப்பாடி பழனிசாமி பாதுகாப்பு அரணாக இருப்பார். நாடாளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளிலும் அதிமுக கூட்டணி அமோக வெற்றி பெறும் என்றார்.

தீர்ப்பு குறித்து செய்தியாளர்களிடம் பேசிய  அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு, அதிமுகவின் வெற்றி சரித்திரத்தில் மகுடமாக மற்றும் ஒரு வெற்றியை நீதி அரசர்கள் வழங்கி இருக்கிறார்கள். கழகத்தை பொருத்தமட்டில் மக்கள் பணியே மகேசன் பணி என்று புரட்சித்தலைவர் சொல்வது போல மக்களுக்காகவே இந்த இயக்கம் அர்ப்பணிக்கப்பட்டது என்று புரட்சித்தலைவி அம்மா சொல்லுவார்கள். அந்த வகையில் இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் தன்னுடைய அனுபவத்தாலும் அம்மாவிடம் கற்ற பாடத்தினாலும் கழகத்தை வளர்ப்பதில் முன்னோடியாக திகழ்கிறார். இந்த வெற்றிக்காக எடுத்த முயற்சிக்காக வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம். தற்போது வந்திருக்கக்கூடிய தீர்ப்பு வரவேற்கத்தக்கது. அதிமுக இடைக்கால பொது செயலாளராக இருக்கின்ற எடப்பாடி பழனிசாமி ஐந்தாண்டு காலம் சிறப்பான ஆட்சியை தமிழகத்துக்கு தந்தார். ஏனென்றால் மறைந்த முதல்-அமைச்சர் அம்மாவின் மாணவர் அவர். அம்மாவிடம் பயிற்சி பெற்றவர், தொண்டர்களின் ஒட்டுமொத்த ஆதரவை பெற்றவர். எனவே நிரந்தர பொது செயலாளராக எடப்பாடி பழனிசாமி விரைவில் வருவார். மீண்டும் அதிமுக ஆட்சி அமைக்கும். எடப்பாடி பழனிசாமிக்கு பெருகி உள்ள ஆதரவு தமிழக மக்களுக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றியாகும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளனர்.

[youtube-feed feed=1]