டில்லி

அமலாக்கத்துறை லாலு பிரசாத் மற்றும் அவர் மகன் தேஜஸ்வி யாதவுக்கு மீண்டும் சம்மன் அனுப்பி உள்ளது.

ராஷ்டிரிய ஜனதா தள தலைவரும் உத்தரப்பிரதேச முன்னாள் முதல்வருமான லாலு பிரசாத் யாதவ் ரயில்வே அமைச்சராக இருந்தபோது ரயில்வேயின் பல்வேறு மண்டலங்களில் ‘குரூப் டி’ பணிகளில் பலர் நியமிக்கப்பட்டனர்.

இவ்வாறு 2004-09 காலகட்டத்தில் நியமனம் பெற்றவர்கள், அதற்குப் பதிலாக அவர்களது நிலங்களை லாலு பிரசாத் குடும்பத்தினருக்கு மாற்றம் செய்து கொடுத்ததாகக் குற்றச்சாட்டு எழுந்தது. அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ இந்த பண மோசடி வழக்கை விசாரித்து வருகின்றன.

கடந்த சில மாதங்களாக லாலு பிரசாத் யாதவின் மனைவி ராப்ரி தேவி, அவர்களது மகனும், பீகார் துணை முதல்வருமான தேஜஸ்வி யாதவ, மகள்கள் மிசா பாரதி., சந்தா, ராகிணி ஆகியோரின் வாக்குமூலங்களை அமலாக்கத்துறை பதிவு செய்துள்ளது.

கடந்த நவம்பர் மாதம் இந்த விவகாரத்தில் லாலு பிரசாத் யாதவ் குடும்பத்தின் நெருங்கிய நண்பரான அமித் கத்யாலை அமலாக்கத்துறை கைது செய்தது. வழக்கு தொடர்பாக லாலு பிரசாத் மற்றும் அவரது மகன் தேஜஸ்வி யாதவை அமலாக்கத்துறை கடந்த டிசம்பர் மாதம் ஆஜராக சம்மன் அனுப்பியிருந்தும் அவர்கள் இருவரும் விசாரணைக்கு ஆஜராகவில்லை.

எனவே லாலு பிரசாத் மற்றும் அவரது மகன் தேஜஸ்வி யாதவுக்கு அமலாக்கத்துறை மீண்டும் சம்மன் அனுப்பியுள்ளது.  அதாவது லாலு பிரசாத் வருகிற 29-ம் தேதியும், அவரது மகன் தேஜஸ்வி யாதவ் வருகிற 30-ம் தேதியும் அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜராகச் சம்மன் அனுப்பியுள்ளது.