டில்லி

திமுக பிரமுகர் பொன்முடியும் மகனும் மக்களவை உறுப்பினருமான கவுதம் சிகாமணியின் ரூ.8.6 கோடி மதிப்பிலான சொத்துக்களை அமலாக்கத்துறை பறிமுதல் செய்துள்ளது.

முன்னாள் அமைச்சருமான பொன்முடியின் மகன் கவுதம் சிகாமணி மக்களவை உறுப்பினர் ஆவார்.   திமுக சார்பில் மக்களவை உறுப்பினராக உள்ள இவருடைய 8.60 கோடி மதிப்பிலான சொத்துக்களை அமலாக்கத்துறை பறிமுதல் செய்துள்ளது.  இது குறித்து அமலாக்கத் துறை ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

அந்த அறிவிப்பில், “அமலாக்கத்துறை அந்நிய செலாவணி மேலாண்மை சட்டம் 1999 பிரிவு எண் 37 ஏ வின் கீழ் மக்களவை உறுப்பினர் கவுதம் சிகாமணியின் ரூ. 8.60 கோடி மதிப்பிலான சொத்துக்களைப் பறிமுதல் செய்ய உத்தரவிட்டுள்ளது.   இது அவர் சட்டவிரோதமாக வெளிநாட்டு நிறுவனங்களில் முதலீடு செய்ததன் மூலம் பெற்ற வருமானத்துக்குச் சமமாகும்.

அமலாக்கத்துறை இயக்குநரகத்துக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் கே பொன்முடியின் மகன் கவுதம் சிகாமணி ரிசர்வ் வங்கியின் ஒப்புதல் இல்லாமல் அன்னிய செலாவணி விதி 1999 பிரிவு 4 இன் கீழ் விசாரணை நடத்தப்ப்டது.  அந்த விசாரணையின் போது கடந்த 2008 ஆம் வருடம் மார்ச் மாதம் இந்தியக் குடிமகனான கவுதம் சிகாமணி வெளிநாட்டில் முதலீடு செய்துள்ளது தெரிய வந்தது.

இந்த முதலீட்டின் மூலம் அவர் ஜாகர்த்தாவில் உள்ள பிடி எக்செல் நிறுவனத்தின் 2,45,000 பங்குகளை ஒரு லட்சம் டாலருக்கும் ஐக்கிய அரபு அமீரகத்திலுள்ள யுனிவர்சல் பிசினெஸ் வென்சர்ஸ் நிறுவனத்தின் பங்குகளை 55,000 டாலருக்கும் வாங்கி உள்ளார். இதன் மூலம் அவருக்கு 2008-19 முதல் 2012-13 வரை  கிடைத்த வருமானத்தை கணக்குக் காட்டாமல் மறைத்துள்ளார்.

அவருக்கு ரூ.7,05,57,237 வருமானம் கிடைத்துள்ளது. எனவே அதற்குச் சமமாக அவருடைய சொத்துக்களில் இருந்து ரூ. 8.60 கோடி மதிப்பிலான அமலாக்கத்துறை பறிமுதல் செய்ய உத்தரவிட்டுள்ளது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.