சண்டிகர்: பஞ்சாப் முதல்வரின் உறவினர் வீடுகளில் நடைபெற்ற ரெய்டில் ரூ.6 கோடி பறிமுதல் செய்யப்பட்டு உள்ளதாக அமலாக்கத்துறை தெரிவித்து உள்ளது. முதல்வர் சன்னியின் மருமகன் பூபிந்தர் சிங் ஹனியிடம் இருந்து 4 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

177 இடங்களை கொண்ட பஞ்சாப் சட்டசபைக்கு பிப்ரவரி 20-ம் தேதி ஒரேகட்டமாக தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது. தேர்தலில் பதிவான வாக்குகள் மார்ச் 10-ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது. இதன் காரணமாக அங்கு அரசியல் களம் சூடுபிடித்துள்ளது.

இந்த நிலையில், பஞ்சாபில் சட்டவிரோத மணல் கடத்தல்  மற்றும் கனிம வளங்கள் முறைகேடு தொடர்பாக அமலாக்கத்துறை பல்வேறு இடங்களில் அதிரடி சோதனைகள் மேற்கொண்டது. குறிப்பாக பஞ்சாப் முதல்வர் சன்னியின் உறவினர்களின் வீடுகளிலும் சோதனை நடைபெற்றது.   சரண்ஜித் சிங் சன்னியின் மருமகன் புபீந்தர் சிங் ஹனி மற்றும் அவரது கூட்டாளி சந்தீப் குமார் ஆகியோரின் வீட்டில் இந்த சோதனை நடைபெற்றது. தொடர்பாக இந்த சோதனை நடைபெற்றது.

பல மணி நேரம் நடைபெற்ற இந்த சோதனையில் 6 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. புபீந்தர் சிங் ஹனி வீட்டில் இருந்து 4 கோடி ரூபாயும் அவரது கூட்டாளி சந்தீப் குமாரின் வீட்டில் இருந்து 2 கோடி ரூபாயும் கைப்பற்றப்பட்டது.

இந்த விவகாரம் பஞ்சாப் அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.