பெங்களூரில் உள்ள பைஜூஸ் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி ரவீந்திரனுக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

அந்நிய செலாவணி மோசடி தொடர்பாக ரவீந்திரன் வீடுகளில் சோதனை நடைபெற்று வருகிறது.

2011 முதல் 2023 ஆண்டு வரை சுமார் 28000 கோடி ரூபாய் அந்நிய முதலீடுகளை பெற்றிருக்கும் இந்த நிறுவனம் அந்நிய செலாவணி மோசடி செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.

இதே காலகட்டத்தில் வெளிநாட்டில் உள்ள நிறுவனங்களுக்கு சுமார் ரூ. 9754 கோடி டெபாசிட் செய்துள்ளதும் தெரியவந்துள்ளது.

பெங்களூரில் உள்ள ஒரு வீடு மற்றும் இரண்டு அலுவலகங்களில் நடத்தப்பட்ட சோதனையில் பல்வேறு ஆவணங்கள் மற்றும் தரவுகள் கைப்பற்றப்பட்டுள்ளது.

2020 -21 நிதியாண்டு முதல் தனது வருமான கணக்கை தணிக்கை செய்யாமல் உள்ள இந்த நிறுவனம் மீது பல்வேறு நபர்கள் புகார் அளித்ததைத் தொடர்ந்து இந்நிறுவன தலைவர் ரவீந்திரனுக்கு பலமுறை சம்மன் அனுப்பப்பட்டும் விசாரணைக்கு ஆஜராகாத நிலையில் அமலாக்கத்துறை சோதனை நடவடிக்கையை மேற்கொண்டிருப்பதாகத் தெரிவித்துள்ளது.