சென்னை: டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் இடி ரெய்டு நடைபெற்று வருவது, ஸ்டாலின் மாடல் அரசுக்கு வெட்ககேடு என்றும், ஸ்டாலின் மாடல் என்றால் என்ன? என்று கேட்டால், மேற்கண்ட செய்திகள் உணர்த்தும் “கலெக்ஷன்- கமிஷன்- கரப்ஷன்” தான் பதில் என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் காட்டமாக விமர்சித்துள்ளார்.
திமுக அமைச்சர் செந்தில் பாலாஜியின் தலைமையின் கீழ் இயங்கும் சென்னை எழும்பூரில் உள்ள தாளமுத்து நடராஜன் மாளிகை வளாகத்தில் செயல்பட்டு வரும் டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் உள்பட டாஸ்மாக் நிறுவனத்துக்கு மதுபானம் தயாரித்து வரும் ஜெகத்ரட்சகன் மற்றும் எஸ்என்ஜெயமுருகன் நிறுவனத்திலும் அமலாக்கத்துறை நேற்று முதல் சோதனை நடத்தி வருகிறது. இன்று 2ஆவது நாளாக அமலாக்கத்துறை சோதனை தொடர்கிறது. அமலாக்கத்துறையின் இந்த திடீர் சோதனை அரசியல் வட்டாரத்தில் முக்கிய பேசுபொருளாகியுள்ளது.
இதுகுறித்து அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். இந்த சோதனையானது தமிழ்நாடு அரசை வெட்கக்கேடான நிலைக்குதள்ளி இருப்பது கண்டனத்திற்குரியது. அமலாக்கத் துறையால் கைதாகி பிணையில் வருவதை தியாகமாக ஊழல் திலகங்கள் கருதுகின்றனர்; இவர்களின் ஆட்சியில் நேர்மையை எப்படி எதிர்பார்ப்பது? என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கேள்வியை எழுப்பியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், ‘தமிழ்நாடு மாநில வாணிபக் கழகத்தின் (TASMAC) தலைமை அலுவலகத்தில் இன்று 2வது நாளாக அமலாக்கத்துறை சோதனை நடந்து வருகிறது.
இதுபோக, திமுகவினருடன் தொடர்புள்ள சாராய நிறுவனங்கள், பத்து ரூபாய் பாட்டில் புகழ் அமைச்சர் தியாகி பாலாஜிக்கு தொடர்புள்ள இடங்கள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சோதனை நடந்துள்ளதாக செய்திகள் வந்துள்ளன.
ஸ்டாலின் மாடல் என்றால் என்ன? என்று கேட்டால், மேற்கண்ட செய்திகள் உணர்த்தும் “கலெக்ஷன்- கமிஷன்- கரப்ஷன்” தான் பதில்!
விஞ்ஞான ஊழலை நிறுவனமயமாக்கி, தமிழ்நாடு அரசு நிறுவனத்தின் தலைமை அலுவலகத்திற்கு அமலாக்கத்துறை வரும் வெட்கக்கேடான நிலைக்கு ஸ்டாலின் மாடல் அரசு தள்ளியிருப்பது கடும் கண்டனத்திற்குரியது.
மக்களுக்கு சேரவேண்டிய நன்மைகளை முடக்கி, மக்களை நேரடியாக பாதிக்கின்ற ஊழல்களின் ஊற்றிடமான திமுக-வின் ஆட்சியில், அதுவும், ஊழல் செய்து, அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு, பிணையில் வருவதை “தியாகமாக” கருதும் இந்த “ஊழல் திலகங்களின்” ஆட்சியில், நேர்மையெல்லாம் எப்படி எதிர்பார்ப்பது?
10 ஆண்டுகால அஇஅதிமுக ஆட்சியில் வாங்கிய கடன்கள், மக்கள் நலத் திட்டங்களாக தமிழ்நாடெங்கும் மிளிர, 3 ஆண்டுகளில் திமுக ஆட்சி வாங்கிய 3.5 லட்சம் கோடி கடனோ, இத்தகைய ஊழல் பேர்வழிகளின் லஞ்சப்பைகளை மட்டுமே நிரப்பியுள்ளது.
அரசியல் பிழைத்தோருக்கு அறம் கூற்றாகும்!
இவர்களுக்கான பதிலை 2026 களம் சொல்லும்’ எனத் தெரிவித்துள்ளார்