சென்னை: சட்டவிரோத பண பரிமாற்றம் தொடர்பான புகாரில், அமைச்சர் நேரு மற்றும் அவரது உறவினர்களின் வீடுகளில் அமலாக்கத்துறை சோதனை நடத்திய நிலையில், அவரது தம்பி கே.என்.ரவிச்சந்திரன் வீட்டில் இன்று 3வது நாளாக சோதனை தொடர்கிறது.

இதற்கிடையில், சோதனையைத் தொடர்ந்து, கே.என்.ரவிச்சந்திரனை அமலாக்கத்துறை அலுவலகம் அழைச்சென்று அமலாக்கத்துறை சுமார் 4மணி நேரம் விசாரணை நடத்திய நிலையில், இன்று முற்பகல் மீண்டும் அவரை அவரது வீட்டுக்கு அழைத்து சென்று அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
அமைச்சர் கே.என்.நேரு மற்றும் அவரது சகோதரர் ரவிச்சந்திரனுக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள ரவிச்சந்திரனின் இல்லத்தில் அதிகாரிகள் தொடர்ந்து இன்று 3-வது நாளாக சோதனை நடத்துகின்றனர். கோட்டூர்புரத்தில் உள்ள டி.வி.எச். நிறுவனத்தில் தலைமை அலுவலகத்திலும் சோதனை நடக்கிறது. அடையாறு காந்தி நகரில் உள்ள டி.வி.எச் நிறுவன இயக்குநர் ரமேஷ் வீட்டில் சோதனை நடந்து வருகிறது.
முறைகேடான பண பரிமாற்ற வழக்கில் அமைச்சர் கே.என்.நேருவின் சகோதரர் ரவிச்சந்திரனை, அமலாக்கத்துறை அதிகாரிகள் நேற்று மாலை திடீரென காரில் அழைத்து சென்றனர். சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் வைத்து விசாரணை நடத்தினர். தொடர்ந்து 4 மணி நேரத்திற்கும் மேலாக அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்ட அதிகாரிகள், மீண்டும் ரவிச்சந்திரனை அவரது இல்லத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.