சென்னை: பல்வேறு வழக்குகளில் சிக்கியுள்ள பிரபல லாட்டரி அதிபர் மார்ட்டின் மருகனான தொழிலதிபர் ஆதவ் அர்ஜூனா சமீபத்தில் விசிகவில் இணைந்து, கட்சியின் துணைப்பொதுச்செயலாளர் பதவியை பெற்ற நிலையில், அவரது வீட்டில் அமலாக்கத்துறை சோதனை நடைபெற்று வருகிறது.
சட்டவிரோத பண பரிவர்த்தனை மற்றும் தடை செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்பினருடன் தொடர்பு தொடர்பாக அமலாக்கத்துறை, வருமான வரித்துறை, தேசிய பாதுகாப்பு துறை என பல துறையினர் அவ்வப்போது ரெய்டு நடத்தி வருகின்றனர். கடந்த சில நாட்களுக்கு தமிழக அமைச்சர்களுடன் தொடர்புடைய மணல் குவாரி உரிமையாளர்கள், கட்டுமான நிறுவனங்களில் இந்த சோதனை நடத்தப்பட்டது என்பது தெரிந்ததே.
இந்த நிலையில் இன்று திடீரென மீண்டும் மீண்டும் 10க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சென்னையில் சோதனை செய்து வருகின்றனர்,. ரேசன் பொருட்கள் விநியோக ஊழல் தொடர்பாக பல இடங்களில் சோதனை நடத்தப்பட்டு வருகிறது. சென்னை கோட்டூர் புறத்தில் விஷ்ணு என்பவர் வீட்டில், சென்னை அண்ணா நகரில் சுப்பிரமணியம் என்பவர் வீட்டில், தனியார் கட்டுமான நிறுவனத்தின் அலுவலகத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்து வருவதாகவும் தெரிகிறது.
இதைத்தொடர்ந்து, சென்னை தேனாம்பேட்டை கஸ்தூரி ரங்கன் சாலையில் உள்ள விசிக துணைப் பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா வீட்டில் அமலாக்கத் துறை அதிகாரிகள் இன்று காலை முதல் சோதனை நடத்தி வருகின்றனர். ஆதவ் அர்ஜுனா வீடு மற்றும் அவருக்கு சொந்தமான அலுவலகங்களில் இந்த சோதனை நடத்தப்படுகிறது. சென்னையை தவிர்த்து கோவையில் உள்ள ஆதவ் அர்ஜுனாவுக்கு சொந்தமான இடங்களிலும் சோதனை நடத்தப்படுகிறது. ஆதவ் அர்ஜுனா அமலாக்கத் துறை சோதனையை எதிர்கொள்வது இது முறை கிடையாது.
ஆதவ் அர்ஜுனா?
பிரபல லாட்டரி அதிபர் மார்டினின் மருமகன் ஆதவ் அர்ஜூன். இவர் தனது தொழில் வளர்ச்சிக்காக அரசியல் கட்சிகளில் இணைய முயற்சித்து வந்தார். இந்த நிலையில், விசிகவுடனான தொடர்பில் கடந்த கடந்த ஓர் ஆண்டுக்கும் மேலாக செயல்பட்டு வந்தார். இதைத்தொடர்ந்து விசிகவுன் தேர்தல் வியூக வகுப்பு நிறுவனமான வாய்ஸ் ஆஃப் காமன்ஸ் தலைவராக பணியாற்றி வந்தார்.
இவர், அண்மையில் திருச்சியில் நடைபெற்ற ‘வெல்லும் ஜனநாயகம்’ மாநாட்டில் விசிகவின் அடிப்படை உறுப்பினராக இணைந்தார். இந்த மாநாட்டுக்கான பல கோடி ரூபாய் செலவை ஆதவ் அர்ஜுன் ஏற்றுக்கொண்டதாக கூறப்பட்டது. அதற்கு பிரதிபலனாக, சில வாரங்களில் அவருக்கு விசிக துணைப் பொதுச் செயலாளர் பதவி அளிக்கப்பட்டது. இது விசிக தலைவர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியது. ஆனால், ஆதவ் அர்ஜினாவை பொதுத்தொகுதியில் போட்டியிட வைக்கும் ஆசையில், திருமாவளவன் அவருக்கு பதவி கொடுத்ததாக தகவல்கள் பரவின. ஆனால், விசிகவுக்கு பொதுத்தொகுதியை ஒதுக்க திமுக தலைமை மறுத்து விட்டது.
இந்த நிலையில், அவரை விசிக சார்பில் பொதுத் தொகுதியில் போட்டியிட வைக்கவும் தலைமை திட்டமிட்டதாக தகவல் வெளியானது. அதற்காக திமுக கூட்டணியில் பொதுத் தொகுதி ஒன்றை கேட்டனர். ஆனால், திமுக கூட்டணியில் இரண்டு தனித் தொகுதி மட்டுமே விசிக ஒதுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
லாட்டரி விற்பனையில் கோவையைச் சேர்ந்த தொழிலதிபர் மார்ட்டின் முக்கியப் பங்கு வகித்துவருகிறார். 2019-ம் ஆண்டு லாட்டரி அதிபர் மார்ட்டின் தொடர்புடைய 70-க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். அப்போது முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. 2009 – 2010-ம் ஆண்டு காலகட்டத்தில் சிக்கிம் மாநில லாட்டரி விதிகளை மீறி 910 கோடி ரூபாய் வருவாய் ஈட்டியதாகவும், அந்த வருவாயை 40-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் மூலம் மாற்றி முதலீடு செய்தது கண்டுபிடிக்கப்பட்டது.
அதனடிப்படையில் கொச்சி அமலாக்கத்துறையினர் சட்டவிரோத பணப் பரிமாற்றம் தொடர்பாக மார்ட்டின், அவரது பங்குதாரர் ஜெயமுருகன் ஆகியோர்மீது வழக்கு பதிவுசெய்தனர். மேலும் லாட்டரி அதிபர் மார்ட்டின் தொடர்புடைய இடங்களில் பல்வேறு கட்டங்களாக அமலாக்கத்துறை சோதனை நடத்தியது, கொச்சி அமலாக்கத்துறை, லாட்டரி அதிபர் மார்ட்டின், அவரின் குடும்பத்தினருக்குச் சொந்தமான இடங்களில் கடந்த 11, 12-ம் தேதிகளில் சோதனை மேற்கொண்டனர். சென்னை உட்பட தமிழகம் முழுவதும் 10-க்கும் மேற்பட்ட இடங்களிலும் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தினர். கடந்த ஆண்டு (2023 மே மாதம்) சோதனை நடத்தி, 457 கோடி ரூபாய் மதிப்புள்ள அசையும், அசையா சொத்துகளை முடக்கியது.
லாட்டரி அதிபர் மார்ட்டின் மற்றும் அவரது குடும்பத்தினரக்கு, கோவை, சென்னை உள்பட பல மாநிலங்களில் ஏராளமான சொத்துக்கள் உள்ளன. கோவை ஹோமியோபதி மருத்துவமனை மற்றும் கல்லூரி‘, மில்கள், டி.வி சேனல், சினிமா என ஏராளமான தொழில்கள் உள்ளது குறிப்பிடத்தக்கது.