சென்னை: லாட்டரி அதிபர் மார்ட்டினுக்கு சொந்தமான மேலும் ரூ.19.59 கோடி மதிப்பிலான அசையா சொத்துக்களை அமலாக்கத்துறை பறிமுதல் செய்துள்ளது.

பிரபல லாட்டரி தொழிலதிபரான மார்ட்டின் மீது ஏராளமான புகார்கள் உள்ளன. ஏற்கனவே அவர்மீதான புகாரின் பேரில்,  கடந்த 2019ம் ஆண்டு ஏப்., 30ல், நாடு முழுவதும், மார்ட்டினுக்கு சொந்தமான, 70 இடங்களில், வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். கோவையில், 22 இடங்களிலும், சென்னையில், 10 இடங்களிலும் ஐந்து நாட்களாக சோதனை நீடித்தது. இதையடுத்து, கணக்கில் வராத, 8.25 கோடி ரூபாய் மறைத்து வைத்திருந்ததை, வருமான வரி அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மேலும், 24.57 கோடி ரூபாய் மதிப்பிலான, தங்கம் மற்றும் வைர நகைகள், கணக்கில் காட்டப்படாத, 1,214 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்து ஆவணங்கள் உள்ளிட்டவற்றையும், அதிகாரிகள் கண்டுபிடித்து கைப்பற்றினர்.

இதையடுத்து,  வரி ஏய்ப்பு தொடர்பாக, மார்ட்டினிடம் வருமான வரித்துறையினர் மற்றும் அமலாக்கத்துறையினர் விசாரணை நடத்தி வந்ததுடன், அவருக்கு சொந்த அசையா சொத்துக்களை பறிமுதல் செய்யும் நடவடிக்கை எடுத்து வந்தது.

இந்த நிலையில், தற்போது ரூ.19.59 கோடி மதிப்பிலான அசையா சொத்துக்களை பறிமுதல் செய்துள்ளது. கடந்த 2002ம் ஆண்டு நடைபெற்ற சிக்கிம் லாட்டரி முறைகேடு தொடர்பான வழக்கில், இந்த சொத்துக்களை பறிமுதல் செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

சாண்டியாகோ மார்ட்டினுக்கு சொந்தமான ரூ. 258 கோடி மதிப்பிலான சொத்துக்களை அமலாக்கத்துறை ஏற்கனவே பறிமுதல் செய்த நிலையில், தற்போது மேலும் 19.59 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்களை முடக்கி உள்ளது.  இதன் மூலம், இந்த வழக்கில் மொத்த இணைப்பு ரூ. 277.59 கோடி சொத்துக்களை பறிமுதல் செய்துள்ளது.,