ராஞ்சி
ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரனின் ரூ,31 கோடி சொத்து அமலாக்கத்துறையால் முடக்கப்பட்டுள்ளது.
ஜார்கண்ட் முதல்வராக இருந்த ஹேமந்த் சோரன் உள்ளிட்டோர் மீது நில மோசடி வழக்குப் பதிவு செய்யப்பட்டு உள்ளது. நிதி மோசடி தொடர்பாக அமலாக்கத்துறை விசாரணை நடத்தி ஹேமந்த் சோரனைக் கடந்த ஜனவரி மாதம் அமலாக்கத்துறை அதிகாரிகள் கைது செய்தனர்.
அவர் தனது முதல்-மந்திரி பதவியை ராஜினாமா செய்தார். தற்போது ஹேமந்த் சோரன் ராஞ்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார். வழக்கில் ஹேமந்த் சோரன் மற்றும் 4 பேர் மீது ராஞ்சி சிறப்பு நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்து உள்ளனர்.
நேற்று இந்த வழக்கின் விசாரணையை நீதிமன்றம் தொடங்கியது. இந்நிலையில் ஹேமந்த் சோரனுக்குச் சொந்தமான 8.86 ஏக்கர் நிலத்தை அமலாக்கத்துறை அதிகாரிகள் முடக்கி உள்ளனர். இந்த நிலம் ராஞ்சி பராகெய்ன் பகுதியில் உள்ளது, இந்த நிலம் ரூ.31.07 கோடி மதிப்பிலானது ஆகும்.
சோரன் கடந்த 2010-11 ஆம் ஆண்டு முதலே இந்த சொத்தை மோசடியாக பெற்றுக்கொண்டதாக அமலாக்கத்துறை தனது குற்றப்பத்திரிகையில் குற்றம் சாட்டியுள்ளது. அமலாக்கத்துறையின் குற்றப்பத்திரிகையில், இந்த சொத்தை பறிமுதல் செய்ய அனுமதியும் கோரப்பட்டு உள்ளது.
ஆனால் இந்தச் சொத்துக்கும், தனக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை என சோரன் தனது வாக்குமூலத்தில் கூறியிருப்பதாக அமலாக்கத்துறை அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.