சென்னை: மதுபான கொள்கை முறைகேடு மற்றும்  சட்டவிரோத பணப்பரிமாற்றம் தொடர்பாக டெல்லி முதலமைச்சரின் தனிச் செயலாளர் இல்லம் உள்பட 10க்கும் மேற்பட்ட இடங்களில்  அமலாக்கத்துறை சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.  டெல்லியில் ஆம் ஆத்மி கட்சியினருக்கு தொடர்புடைய சுமார் 23 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடைபெற்று வருகிறது.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய  ஆம் ஆத்மி கட்சியின் தலைவரும் டெல்லி அமைச்சருமான அதிஷி, ஆம் ஆத்மி கட்சியை அமைதிப்படுத்தவும் மிரட்டவும் இந்த சோதனைகள் நடைபெறுகின்றன, இதற்கு நாங்கள் பயப்பட மாட்டோம்  என்று கூறினார்.

டெல்லி ஆம்ஆத்மி அரசு கொண்டு வந்த மதுபான கொள்கை முறைகேடு தொடர்பாக இரண்டு அமைச்சர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர். அதாவது,  தலைநகர் டெல்லியை  32 மண்டலங்களாகப் பிரித்து,  849 சில்லறை விற்பனை நிலையங்களுக்கு மதுபானம் விற்பனை செய்ய உரிமம் வழங்கப்பட்டது. இந்த உரிமம் வழங்கியதில் முறைகேடு நடந்ததாகவும், 100 கோடி ரூபாய் கைமாறியதாகவும் புகார்கள் எழுந்தது.

இதுதொடர்பாக அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. விசாரணைகளை தொடர்ந்து, டெல்லி துணை முதல்வர் மற்றும்  கலால்துறை அமைச்சராக இருந்த மனீஷ் சிசோடியா, ஆம் ஆத்மி மாநிலங்களவை உறுப்பினர் சஞ்சய் சிங் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த வழக்கில் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கும் தொடர்பு இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது.

இதனைத் தொடர்ந்து அவரிடம் விசாரணை மேற்கொள்ள அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியது. அதில் விசாரணைக்கு ஆஜராகுமாறு தெரிவித்திருந்தது. ஆனால், சம்மனை வாங்க மறுத்த அரவிந்த் கெஜ்ரிவால், தனக்கு எதிராக சம்மன் அனுப்புவது சட்டவிரோதம் என தெரிவித்து சம்மனை திருப்பி அனுப்பினார். இதனைத் தொடர்ந்து அடுத்தடுத்து 5 முறை  அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியது. ஆனால்,  அரவிந்த் கெஜ்ரிவால் ஆஜராகவில்லை.

இதனால் அமலாக்கத்துறை அதிகாரிகள் அரவிந்த் கெஜ்ரிவால் வீட்டில் சோதனையில் ஈடுபடுவார்கள் எனவும், அவர் கைது செய்யப்படலாம் எனவும் ஆம் ஆத்மி கட்சி தலைவர்கள் சிலர் சமூக வலைதளங்களில் பதிவிட்டனர்.இச்செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதோடு பாதுகாப்பிற்காக அவர் வீட்டின் முன் போலீசார் பாதுகாப்பு போடப்பட்டது.

இந்த நிலையில், அண்மையில் டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அம்மாநில முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், ‘பாஜகவில் இணைந்தால் விட்டுவிடுகிறோம்’ என்று தனக்கு மிரட்டல் வருவதாக கூறியிருந்தார்.

இந்த பரபரப்பு அடங்குவதற்குள்,  இன்று டெல்லியில் கெஜ்ரிவாலின் தனிச்செயலாளர் பிபவ் குமார் மற்றும் முன்னாள் டெல்லி ஜல் போர்டு உறுப்பினர் ஷலப் குமார் வீடு உள்பட  ஆம் ஆத்மி கட்சியினருக்கு தொடர்புடைய 12 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை மேற்கொண்டு வருகிறது. இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய  ஆம் ஆத்மி கட்சியின் தலைவரும் டெல்லி அமைச்சருமான அதிஷி, ஆர்ஜே எம்பி என்டி குப்தா, பிபவ் குமார் மற்றும் ஷலப் குமார் ஆகியோருக்கு எதிரான சோதனைகள் எக்ஸ் (முன்னாள் ட்விட்டர்) இல் அவர் வெளியிட்ட பதிவின் பிரதிபலிப்பாக இருந்தது என்று கூறினார். அந்த பதிவில், இன்று காலை 10 மணிக்கு மத்திய நிறுவனத்தில் அம்பலப்படுத்துவேன் என்று எழுதியிருந்தார். அம்பலப்படுத்தப்படுவதைத் தடுப்பதற்காகவே இந்த சோதனைகள் நடத்தப்பட்டதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

அமைச்சர் மேலும் கூறுகையில், “மற்றவர்களின் வீடுகளிலும் ED சோதனை நடத்தும் என்று எங்களிடம் செய்தி உள்ளது. ஆம் ஆத்மி கட்சியை அமைதிப்படுத்தவும் மிரட்டவும் பாஜக மற்றும் அமலாக்க அமைப்புகளின் இந்த முயற்சிகள் என்றும் விமர்சித்தார்.