எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழக வேந்தர் பச்சைமுத்து மற்றும் அவரது குடும்பத்தினருக்கு அமலாக்கத்துறை அனுப்பியுள்ள சம்மனுக்கு தடை விதிக்க முடியாது என்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
மருத்துவ சேர்க்கைக்காக மாணவர்களிடம் இருந்து நன்கொடை பெற்றுக்கொண்டு மோசடி செய்ததாக கடந்த 2016ம் ஆண்டு தொடரப்பட்ட வழக்கு தொடர்பாக அமலாக்கத்துறை அனுப்பிய சம்மனுக்கு எதிராக இந்த புதிய மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் எஸ்.எம். சுப்பிரமணியம் மற்றும் வி. சிவஞானம் ஆகியோர் அடங்கிய பெஞ்ச், இந்த மோசடியில் பாதிக்கப்பட்ட 142 பேருக்கு ₹88.66 கோடி திரும்ப செலுத்தப்பட்டதை காரணமாகக் கூறி அமலாக்கத்துறையின் சட்டப்பூர்வ கடமைகளை தடுக்க முடியாது என்று விளக்கமளித்துள்ளனர்.
பாரிவேந்தர் எனும் பச்சைமுத்துவுக்கு சொந்தமான வேந்தர் மூவீஸ் பட நிறுவனத்தைச் சேர்ந்த மதன் மாணவர்களிடம் மருத்துவ சீட் வாங்கித் தருவதாகக் கூறி கோடிக்கணக்கான பணத்தை ஏமாற்றியதாக சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.
இந்த வழக்கில் பாரிவேந்தர் தலைமையிலான ஐ.ஜே.கே. கட்சி நிர்வாகியான பாபு மற்றும் எஸ்.ஆர்.எம். கல்வி நிறுவன நிர்வாகிகள் ஆகியோர் சேர்க்கப்பட்டனர். இதில் காவல்துறைக்கு தெரியாமல் தப்பியோடி தலைமறைவாக இருந்த மதனை நீண்டநாள் தேடுதலுக்குப் பின் கைது செய்தனர்.
அதேவேளையில் இது தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றம் வரை நீடித்தது, இந்த வழக்கில் இருந்து தன்னை விடுவிக்க பணத்தை கொடுத்து ஏமாந்த மாணவர்களுக்கு அந்தப் பணத்தை திரும்ப அளிக்க பாரிவேந்தர் ஒப்புக்கொண்டார்.
இந்த விவகாரத்தில் தனது கல்வி நிறுவனத்தின் பெயருக்கு களங்கம் ஏற்படக்கூடாது என்பதற்காகவே தான் இவ்வாறு செய்ததாகவும் மதன் உள்ளிட்டவர்கள் செய்த மோசடியில் தனக்கு எந்தப் பங்கும் இல்லை என்றும் பாரிவேந்தர் விளக்கமளித்தார்.
அதே நேரத்தில், மாணவர்களுக்கு திரும்ப வழங்கிய பணம் எங்கிருந்து வந்தது என்பது குறித்து பணமோசடி வழக்கு ஒன்றை அமலாக்கத்துறை பதிவு செய்து விசாரிக்கத் தொடங்கியது.
இதுதொடர்பாக 2022 முதல் நோட்டீஸ் அனுப்பியும் விசாரணைக்கு ஆஜராகாத பாரிவேந்தர் மற்றும் அவரது குடும்பத்தினர் அமலாக்கத்துறை சம்மனுக்கு தடை விதிக்க வேண்டும் என்று நீதிமன்றத்தை நாடினர்.
மாணவர்களுக்கு பணத்தை திரும்ப கொடுத்ததை அடுத்து பாரிவேந்தர் இந்த வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்ட நிலையில் அமலாக்கத்துறை தொடர்ந்து விசாரணை என்ற பெயரில் பாரிவேந்தரையும் அவரது குடும்பத்தினரையும் துன்புறுத்துவதாகவும்.
அவர்களிடம், நீங்கள் எத்தனை அறக்கட்டளை நடத்துகிறீர்கள் அதில் எவ்வளவு பணம் உள்ளது என்பது போன்ற வழக்குத் தேவையில்லாத கேள்விகளை கேட்பதாகவும் பாரிவேந்தரின் வழக்கறிஞர் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
மாணவர்களுக்கு திரும்ப வழங்க பாரிவேந்தர் மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்கள் அங்கம் வகிக்கும் அறக்கட்டளையில் இருந்து பணம் எடுக்கப்பட்டுள்ளதாக நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை சார்பில் ஆஜரான வழக்கறிஞர் கூறினார்.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் விசாரணை நடத்தும் அமைப்பான அமலாக்கத்துறையின் சம்மனுக்கு தடை விதிக்க முடியாது என்று கூறி மனுவை தள்ளுபடி செய்தனர்.