புதுடெல்லி:

வேலையில்லா திண்டாட்டம் குறித்து தேசிய மாதிரி சர்வே அலுவலகம் (என்எஸ்எஸ்ஓ)வெளியிட்ட அறிக்கையை, மாற்றம் செய்யாமல் வெளியிடுமாறு மத்திய அரசுக்கு பொருளாதார நிபுணர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.


ஆண்டுதோறும் 2 கோடிக்கு பேருக்கு வேலை வாய்ப்பு தருவோம் என கடந்த 2014-ம் ஆண்டு தேர்தலில் பாஜக தேர்தல் வாக்குறுதி அளித்திருந்தது.

மற்ற வாக்குறுதிகளைப் போலவே அந்த வாக்குறுதியும் நிறைவேற்றப்படவில்லை. பணமதிப்பிழப்பு மற்றும் ஜிஎஸ்டி நடவடிக்கையால் பல கோடி பேர் வேலை இழந்தனர்.

இந்நிலையில், என்எஸ்எஸ்ஓ-வின் அறிக்கையில், கடந்த 2017-18-ல் வேலை இல்லா திண்டாட்டம் 6.1% அதிகரித்ததாக கூறப்பட்டிருந்தது.

இந்நிலையில், என்ஐடிஐ அயோக் துணைத் தலைவர் ராஜீவ் குமார் தலைமையிலான பொருளாதார நிபுணர்களின் கூட்டத்தில் என்எஸ்எஸ்ஓவின் அறிக்கை குறித்து விவாதிக்கப்பட்டது.

என்எஸ்எஸ்ஓவின் சர்வே அறிக்கையில், 45 ஆண்டுகள் இல்லாத அளவுக்கு கடந்த 2017-18ம் ஆண்டில் வேலை இல்லா திண்டாட்டம் 6.1 சதவீதம் அதிகரித்திருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த அறிக்கையில் எவ்வித மாற்றமும் செய்யாமல் அரசு உடனே வெளியிடவேண்டும்.

இவ்வாறு பொருளாதார நிபுணர்கள் கூட்டத்தில் மத்திய அரசுக்கு கோரிக்கை வைக்கப்பட்டது.