சென்னை: மருத்துவ படிப்பில் பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கு 10% இட ஒதுக்கீடு வழங்குவது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து, மத்தியஅரசு  உச்சநீதி மன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது.

தமிழகத்தில் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ்., உள்ளிட்ட மருத்துவப் படிப்புகளில் சேர அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்கி தமிழக அரசு சட்டம் நிறைவேற்றியது. இந்த சட்டத்தை ரத்து செய்யக் கோரி தனியார் பள்ளி மாணவர்களும், அரசுப் பள்ளி மாணவர்களுக்கு வழங்கியது போல் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கும் 7.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்க உத்தரவிட வேண்டும் எனக் கோரி தமிழ்நாடு கத்தோலிக்கக் கல்வி சங்கம் சார்பிலும் வழக்குகள் தொடரப்பட்டன.

இதுதொடர்பான வழக்குகள் சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி நீதிபதி ஆதிகேசவலு அமர்வில் விசாரிக்கப்பட்டு வருகிறது. வழக்கின் இன்றைய விசாரணையின்போது,அரசு தரப்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர் சண்முக சுந்தரம், கடந்த ஆண்டு இடஒதுக்கீடு காரணமாக 300க்கும் மேற்பட்ட அரசு பள்ளி மாணவர்கள் மருத்துவ படிப்பில் சேர்ந்துள்ளனர், மேலும் ஏற்கெனவே அரசுப் பள்ளி மாணவர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கப் பரிந்துரைத்த ஐகோர்ட்டின் ஓய்வு பெற்ற நீதிபதிகள் கலையரசன், டி.முருகேசன் ஆகியோரின் தீர்ப்பு மற்றும்  நீதிபதி ஏ.கே.ராஜன் அளித்த அறிக்கையையும் படித்துப் பார்க்க வேண்டியதிருப்பதால், வழக்கு விசாரணையை 2 வாரங்களுக்குத் தள்ளிவைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.

இதையடுத்து மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள், நீட் தேர்வு முடிவுகள் வெளியாகி, கலந்தாய்வு நடத்தப்பட உள்ளதாகவும், நடப்புக் கல்வியாண்டிலும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு இட ஒதுக்கீடு அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெறும் என்பதாலும், இந்த வழக்கை விரைந்து விசாரிக்க வேண்டும் என்று வாதிட்டனர்.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் இந்த வழக்கின் இறுதி விசாரணையை அக்டோபர் 21-ந் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்து உத்தரவிட்டுள்ளனர். மேலும்,  மருத்துவ படிப்பில் அகில இந்திய இட ஒதுக்கீட்டில் பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கு 10% இட ஒதுக்கீடு வழங்குவதை உச்ச நீதிமன்றத்தின் உத்தரவு இல்லாமல் மேற்கொள்ளக் கூடாது என்றும் உத்தரவிட்டனர்.

சென்னை உயர்நீதிமன்றத்தின் இந்த உத்தரவை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு மேல்முறையீடு செய்துள்ளது.