நியூயார்க்:

உலக நாடுகள் மற்றும் ஐ.நா.வின் எதிர்ப்பையும் மீறி வடகொரியா அரசு தொடர்ந்து ஏவுகணை சோதனைகளை நடத்தி வருகிறது.

இதற்கு அமெரிக்கா, பிரான்ஸ், ஜப்பான் உள்ளிட்ட பல்வேறு நாடுகளும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. வடகொரியா மீது புதிய பொருளாதார தடை விதிக்க வேண்டும் என அமெரிக்க அரசு தீர்மானம் கொண்டு வந்துள்ளது. இந்த தீர்மானத்தின் மீது ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் ஓட்டெடுப்பு நடைபெற உள்ளது.

ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இடம்பெற்றுள்ள 15 நாடுகள் இந்த ஓட்டெடுப்பில் பங்கேற்கின்றன. நிரந்தர உறுப்பு நாடுகள் பட்டியலில் சீனா, பிரான்ஸ், ரஷ்யா, இங்கிலாந்து மற்றும் அமெரிக்கா ஆகியவை இடம்பிடித்துள்ளன. இதில் ரஷ்யாவும், சீனாவும் வடகொரியாவுக்கு ஆதரவாக செயல்பட்டு வருகின்றன.

ஆனால், கடந்த சில நாட்களாக, வடகொரியா அரசின் நடவடிக்கைகளுக்கு ரஷ்யாவும், சீனாவும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. அதனால், இன்றைய ஓட்டெடுப்பில் அமெரிக்கா கொண்டு வந்துள்ள தீர்மானத்துக்கு ரஷ்யாவும், சீனாவும் ஆதரவாக ஓட்டு போடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த பொருளாதார தடை மூலம் வடகொரியாவின் வருவாயில் 1 பில்லியன் அமெரிக்க டாலர் அளவிற்கு இழப்பு ஏற்படும் என்று கூறப்படுகிறது. ஜூலை மாதம் மட்டும் வடகொரியா இரண்டு ஏவுகணை சோதனைகளை மேற்கொண்டுள்ள நிலையில், அமெரிக்கா இந்த தீர்மானத்தை கொண்டு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.