லாகூர்:

மும்பை தாக்குதல் உள்பட பல்வேறு பயங்கரவாத தாக்குதல்களில் தொடர்புடைய லஷ்கர் பயங்கரவாத அமைப்பின் தலைவன் ஹபீஸ் சயீத், பாகிஸ்தானில் அரசியல் கட்சி தொடங்கியுள்ளார்.

இதற்கு ‘‘ரத்தம் படிந்த கைகளை வாக்கு மையால் சயீத் மறைக்க பார்க்கிறார்’’ என இந்தியா கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
ஜமாத் உத் தாவா என்ற பயங்கரவாத அமைப்பின் தலைவர் ஹபீஸ் சயீத். இவர் மும்பை தாக்குதல் உள்ளிட்ட இந்தியாவில் நடந்த பல பயங்கரவாத தாக்குதல் சம்பவங்களுக்கு மூளையாக செயல்பட்டுள்ளார்.

இந்தியா அவரை தேடப்படும் குற்றவாளியாக அறிவித்துள்ளது. அமெரிக்காவும் அவரது தலைக்கு 10 மில்லியன் அமெரிக்க டாலர் விலை நிர்ணயித்துள்ளது. சில மாதங்களுக்கு முன்னர் பாகிஸ்தானில் வீட்டுச்சிறையில் சயீத் வைக்கப்பட்டுள்ளார். இருப்பினும் அவர் சுதந்திரமாக செயல்பட்டு வருவதாக கூறப்பட்டது. ஹபீஸ் சயீத் விவகாரத்தில் பாகிஸ்தான் அரசு இரட்டை வேடம் போடுவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இந்நிலையில் பயங்கரவாதி ஹபீஸ் சயீத் பாகிஸ்தானில் அரசியல் கட்சியை துவங்கி உள்ள அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. பாக்., தேர்தல் ஆணையத்தில் அவரது கட்சி பதிவு செய்யப்பட்டுள்ளது. பயங்கரவாத இயக்கமான ஜமாத் உத் தவா இயக்கத்தை ‘‘மில்லி முஸ்லீம் லீக் பாகிஸ்தான்’’ என்ற அரசியல் கட்சியாக பதிவு செய்துள்ளார்.

இதற்கு இந்தியா கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளது. ‘‘ரத்தம் படிந்த கைகளை வாக்கு மையால் பயங்கரவாதி சயீத் மறைக்க பார்க்கிறார்’’ என இந்தியா தனது எதிர்ப்பை தெரிவித்துள்ளது.