டில்லி:

பருவ நிலை மாற்றம் காரணமாக இந்திய விவசாயிகளின் வருவாய் 20 முதல் 25 சதவீதம் வரை பாதிக்கும் என்று பொருளாதார சர்வே முடிவுகள் மூலம் தெரியவந்துள்ளது.

‘‘அதனால் தெளிவான முன்னேற்றம் பாசனத்தில் ஏற்படுவது அவசியம். புதிய தொழில்நுட்பங்கள், சீரான மின் மற்றும் உரம் மானியம் விநியோகமும் தேவை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. விவசாயத்தில் ஏற்படும் மன அழுத்தம் மற்றும் விவசாயிகளின் வருவாயை இரட்டிப்பாக்கும் வகையில் அரசு தொடர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

விவசாயம் மாநில அரசுகளின் பட்டியலில் இருக்கிறது. இது அரசியல் பொருளாதார கேள்வியாகவும் உள்ளது. விவசாய துறையை சீரமைக்கும் வகையிலும், விவசாயிகளின் வருவாயை அதிகரிக்கும் வகையிலும் சீரமைப்பு பணிகளை ஜிஎஸ்டி கவுன்சில் மேற்கொள்ள வேண்டும்’’ என்று அந்த சர்வே முடிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், அந்த முடிவில், ‘‘பருவ நிலை மாற்றம் இந்திய விவசாயத்திற்கு சவாலாக உள்ளது. 2017&18ம் ஆண்டில் விவசாயிகளின் வருவாய் குறைந்தபட்சம் 15 முதல் 18 சதவீத்தில் இருந்து 20 முதல் 25 சதவீதம் வரை குறையும். ஒரு நடுத்தர பண்ணையின் தற்போதைய வருவாயில் இருந்து ஆண்டுக்கு ரூ. 3 ஆயிரத்து 500 என அதிகரிக்க வேண்டும்.

இந்தியாவில் விவசாயம் பரவச் செய்ய வேண்டும். தண்ணீர் பற்றாகுறை அதிகரிப்பு மற்றும் நீர்த்துபோகும் நிலத்தடி நீராதாரத்திற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். தற்போது 45 சதவீத விவசாய நிலத்தில் பாசனம் செய்யப்படுகிறது. பருவநிலை மாற்றத்தால் கர்நாடகா, மகாராஷ்டிரா, மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சட்டீஸ்கர், ஜார்கண்ட் மாநிலங்களில் சிறந்த முறையில் விவசாயம் மேற்கொள்ள முடியவில்லை’’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

‘‘விவசாயத்துக்கான மின்சார மானியத்தை நேரடி மாநிய திட்டமாக மாற்றி அமைக்க வேண்டும். தற்போது உள்ள பயிர் காப்பீட்டு திட்டத்தை தட்ப வெட்ப நிலை சார்ந்தும், ஆளில்லா விமானம் மூலம் பயிர் இழப்பை ஆய்வு செய்து ஒரு வாரத்தில் இழப்பீடு வழங்கும் வகையிலும் மாற்றி அமைக்க வேண்டும்’’ என்று அந்த சர்வே பரிந்துரை செய்துள்ளது.