சென்னை: மோடி தலைமையிலான மத்திய பாஜகஅரசு மீது கடும் குற்றச்சாட்டுக்கள் எழுவதையொட்டி, தமிழக பாஜக தரப்பில் இருந்து தொலைக்காட்சி விவாதங்களில் கலந்துகொள்வதை புறக்கணிக்க முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
தினசரி அரசியல் நிகழ்வுகளைத் தொடர்ந்து, ஊடங்களில் விவாதங்கள் நடைபெறுகின்றன. இதுபோன்ற விவாதங்களில் பிரபல கட்சிகளைச் சேர்ந்தவர்கள், அரசியல் விமர்சகர்கள், ஆலோசகர்கள் கலந்து கொண்டு தங்களது கருத்துக்களை முன்வைப்பது வழக்கம். ஆனால், சமீபகாலமாக, கொரோனா அச்சுறுத்தல் மற்றும் நாட்டின் பொருளாதார சீரழிவு, வேலைவாய்ப்பு போன்ற நிகழ்வுகள் பிரதிநிதிப்படுத்தப் படுவதால், விவாத மேடைகள், அரசியல் மேடைகள் போல காட்சிப்படுத்தப்படுகிறது. நிகழ்ச்சியின்போது, சிலர் கூறும் கருத்துக்கள் மற்றவர்களுக்கு பிடிக்காமல் போகும் நிலை ஏற்படும்போது அங்கு ஒரு சலசலப்பு ஏற்படுகிறது. கு எதிர்கருத்து கூறும்போது அது பிரச்சினையில் முடிந்து விவாத நிகழ்ச்சி பாதியில் முடிக்கும் சூழல் ஏற்படுகிறது. இதனால் டிபேட் நிகழ்ச்சிகள் பார்ப்பதை பலர் தவிர்க்கும் நிலை ஏற்பட்டு வருகிறது.
இதனால் சில அரசியல் தலைவர்கள் தொலைக்காட்சி விவாதங்களை தவிர்த்து வருகின்றனர். அதுபோல, தமிழக பாஜக சார்பில் தொலைக்காட்சி விவாதங்களை தவிர்க்க முடிவு செயயப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. விவாத மேடையில், தங்களின் கருத்துக்களை தெரிவிக்க போதிய அவகாசம் கொடுப்பதில்லை என்று குற்றம் சாட்டும் பாஜகவினர், தமிழக மீடியாக்கள் ஒருதலைப்பட்சமாகவே செயல்படுகிறது, பிரதமர் மோடிக்கு உரிய மரியாதை கொடுக்கப்பபடாமல் கீழ்த்தரமாக விமர்சிக்கிறார்கள், இதனால் டிவி விவாதங்களில் கலந்து கொள்ளப்போவதில்லை என்று முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
இதுதொடர்பாக பாஜக தலைமை அலுவலகமான சென்னை, திநகரில் உள்ள கமலாலயத்தில் மாநில தலைவர் எல். முருகன் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில், மூத்த தலைவர் இல.கணேசன், அமைப்பு பொதுச்செயலர் கேசவவினாயகம், துணை தலைவர்கள் விபி துரைசாமி, எம்என்ராஜா, எம்எல்ஏ க்கள் நயினார் நாகேந்திரன், வானதி சீனிவாசன், உள்ளிட்ட கட்சியின் முக்கிய நிர்வாகிகள் கலந்துகொண்டனர். இந்த கூட்டத்தில், அனைவரும் ஒருமித்த முடிவாக தொலைக்காட்சி விவாதங்களை புறக்கணிக்க முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.