சென்னை,

சோழிங்கநல்லூரில் உள்ள சத்யபாமா பல்கலைக்கழகத்தில் ஏற்பட்ட மாணவர்களின்  வன்முறையை தொடர்ந்து வரும் ஜனவரி 1 வரை பல்கலைக்கழகத்துக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை சோழிங்கநல்லூர் அருகே உள்ள  செம்மஞ்சேரியில், முன்னாள் அதிமுக அமைச்சர் ஜேப்பியாருக்கு சொந்தமான சத்தியபாமா பல்கலைக்கழகம். உள்ளது.

இங்கு  ஆந்திராவை சேர்ந்த மாணவி ராகமோனிகா என்பவர் கம்யூட்டர் துறையில் படித்து வந்தார். தற்போது இந்த பல்கலைக்கழகத்தில் செமஸ்டர் தேர்வு நடைபெற்று வருகிறது. நேற்று நடை பெற்ற தேர்வில் இவர்  சக மாணவியின் விடைத்தாளைப் பார்த்து எழுதியதாகவும், இதனைக் கவனித்த பேராசிரியர் ஒருவர் ராகமோனிகாவை தேர்வறையை விட்டு வெளியேற்றியதாகவும், அதைத் தொடர்ந்து அவரது  ஆடைகளை களைய செய்து சோதனை நடந்ததாகவும் கூறப்படுகிறது.

இதன் மன உளைச்சலுக்கு ஆளான அந்த மாணவி, பல்கலைக்கழக வளாகத்தில்  உள்ள தங்கும் விடுதியில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார்.

இதையடுத்து மாணவர்கள் போராட்டத்தில் குதித்தனர். போராட்டம் வன்முறையாக மாறியது. நேற்று இரவு  பல்கலைக்கழக விடுதி மற்றும் விடுதியை சுற்றி உள்ள வளாகத்திற்கும்  தீ வைக்கப்பட்டது.

இதையடுத்து போலீசார் குவிக்கப்பட்டு, மாணவர்களை அங்கிருந்து விரட்டியடித்து,  நிலைமையை கட்டுப்படுத்தினர்.

இந்தநிலையில், சத்யபாமா பல்கலைக்கழகத்திற்கு வரும் ஜனவரி 1ம் தேதிவரை சுமார் 40 நாட்கள்  விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.  அதன் காரணமாக இன்று  கல்லூரிக்கு வந்த மாணவர்கள் திருப்பி  அனுப்பி வைக்கப்பட்டனர்.

ஜனவரி 2ம் தேதி முதல் மீண்டும் செமஸ்டர் தேர்வு நடைபெறும் என்று பல்கலைக்கழக நிர்வாகம் அறிவித்துள்ளது.