சென்னை:

ரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் போராட்டம் காரணமாக, இந்த மாதம் சம்பளம் வழங்குவதில் தாமதம் ஏற்படும் என தகவல் வெளியாகி உள்ளது.

ஏற்கனவே போராட்டத்தில் ஈடுபடுபவர்களின் சம்பளம் பிடித்தம் செய்யப்படும் என அரசு எச்சரிக்கை விடுத்திருந்த நிலையில், போராட்டத்தில் ஈடுபட்டவர்களின் சம்பளம் பிடித்தம் செய்ய வேண்டியதிருப்பதால், ஏற்கனவே கருவூலத்துக்கு அனுப்பப்பட்ட சம்பள பட்டுவாடாவை நிறுத்தி வைக்கும்படி அரசு உத்தரவிட்டு இருப்பதாக கூறப்படுகிறது.

அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு வழக்கமாக மாதத்தின் இறுதிநாள் அல்லது அடுத்த மாதத்தில் முதல் நாளிம் சம்பளம் வழங்கப்பட்டுவிடும். அதற்காக சம்பள பட்டியல் விவரம் மாதத்தின் 20ந்தேதிக்குள் கருவூலங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு சரிபார்த்து சம்பளம் வழங்கப்படும்.

ஆனால், இந்த மாதம் போராட்டத்தில் ஈடுபடுவதற்கு முன்பே, அரசு கருவூலங்க ளுக்கு சம்பளப் பட்டியல் அனுப்பப்பட்டு விட்ட நிலையில், இந்த மாதம் முழு சம்பளமும் கிடைக்கும் என அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் எதிர்பார்ப்புடன் உள்ளனர்.

ஆனால், அரசோ, ஏற்கனவே அனுப்பப்பட்ட சம்பள பட்டியலை நிறுத்தி வைக்க கருவூலங்களுக்கு உத்தரவிட்டு உள்ளது. வேலைக்கு வராதவர்களின் சம்பளத்தை பிடித்துவிட்டு, மற்ற பணி நாட்களுக்கான சம்பள பட்டியலை புதிதாக தயாரித்து அனுப்ப அரசு துறைகள் மற்றும் பள்ளிகளுக்கு உத்தரவிட்டு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

இதன காரணமாக, இந்த மாதம்  அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு சம்பளம் வழங்குவதில் தாதம் ஏற்படும் வாய்ப்பு உருவாகி உள்ளது.

இதன் காரணமாக அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் பெரும் மன குழப்பத்துக்கு ஆளாகி உள்ளனர். பலர் சம்பளத்தை நம்பி கார் லோன், வீடு லோன் என பல லோன்களை பெற்றுள்ள நிலையில், சம்பளம் தாமதமானால், லோன் நிறுவனங்களின் தொல்லைக்கு ஆளாக நேரிடும் என்று அச்சத்தில் உள்ளனர்.

இதற்கிடையில், போராட்டத்தில் ஈடுபடும் ஆசிரியர்கள் இன்று மாலை 5 மணிக் குள் பணிக்கு திரும்பினால் நடவடிக்கை இல்லை  என்றும் பள்ளிக் கல்வித்துறை மீண்டும் எச்சரித்துள்ளது.