சிவகங்கை:

பாகிஸ்தானுக்குள் அத்துமீறி இந்திய விமானப்படை தாக்குதல் நடத்தியதை தொடர்ந்து,  தமிழகத்தில் உள்ள இந்தோ-திபெத் எல்லை பாதுகாப்புப் படை பயிற்சி முகாம் உஷார் படுத்தப்பபட்டு உள்ளது. முகாமின் அனைத்து நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்பட்டு உள்ளன.

புல்வாமா தாக்குதலுக்கு பதிலடியாக இன்று அதிகாலை இந்திய விமானப்படை பாகிஸ்தா னுக்குள் அத்துமீறி நுழைந்து அதிரடி தாக்குதலை நடத்தி பயங்கரவாத முகாம்களை கூண்டோடு அழித்தது.

இதனையடுத்து, இரு நாடுகளுக்கு இடையே போர் பதற்றம் நிலவி வருகிறது. நாட்டின் எல்லையில் மிகுந்த பதற்றம் நிலவி வருகிறது. இந்திய விமானப்படை, தரைப்படை, கப்பல் படைகளுக்கு, மற்ற நிகழ்ச்சிகள், பயிற்சிகளை ரத்து செய்துவிட்டு, உஷாராக இருக்கும்படி பாதுகாப்புத்துறை அறிவுறுத்தி உள்ளது.

இந்த நிலையில், தமிழகத்தில்  சிவகங்கை மாவட்டத்தில் செயல்பட்டு வரும்  இந்தோ – திபெத் எல்லைப் பாதுகாப்புப் படை பயிற்சி மையத்தில் அனைத்து நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன. வீரர்கள் அனைவரும் தயார் நிலையில் இருக்க மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இன்று இந்தோ திபெத் முகாமில், தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் காணொளி காட்சி மூலம் பங்கேற்க இருந்த நிகழ்ச்சியும் ரத்து செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.